2017 இன் டாப் 10 படங்கள் – பட்டியலும் காரணங்களும்

0
634
Nayantara

வருட இறுதியில் நமது பிபியை எகிற வைக்கும் விஷயம், தமிழ் சினிமாவின் டாப் 10 வெற்றிப் படங்கள். இந்தப் பட்டியலை எப்படி அமைப்பது என்பதில் குழம்பிப் போய்விடும் மூளை. ராமானுஜமே வந்து கணக்குப் போட்டாலும் வழியே போறவனே நாலு குறை சொல்வான். அப்படியொரு இடியாப்பச் சிக்கல் இந்த டாப் 10 படங்கள் பட்டியல்.

சிக்கல் 1 – படங்களின் கமர்ஷியல் வெற்றியை வைத்து இந்தப் பட்டியலை அமைப்பதா இல்லை படங்களின் கலாபூர்வ அணுகுமுறையை வைத்து பட்டியலிடுவதா என்பது முதல் குழப்பம்.

உப சிக்கல் 1 – கமர்ஷியல் வெற்றியை வைத்து ஒரு பட்டியல், கலாபூர்வமான அணுகுமுறையை வைத்து ஒரு பட்டியல் என்று இரண்டு பட்டியல் போடலாம் என்றால், முதல்வகையில் எப்படியாவது தட்டி ஒட்டி பத்து படங்களை தேற்றிவிடாலம். கலாபூர்வமான படங்களை நாம் எத்தனை விசாலமான மனதுடன் அணுகினாலும் மூன்றுக்குமேல் தேற்றுவது கடினம்.

சிக்கல் 2 – தமிழ்ப் படங்களின் வசூல் இப்போதும் சிதம்பர ரகசியமாகவே உள்ளது. எந்தப் படம் எத்தனை கோடி வசூலிக்கிறது என்ற தகவல்கள் குத்து மதிப்பானவை. தயாரித்தவர்களுக்கே சரியான கணக்கில்லை.

இந்தச் சிக்கல்களை கவனத்தில் கொண்டு கமர்ஷியல், கலை இரண்டையும் கலந்து குத்து மதிப்பாக நாம் தயாரித்திருக்கும் பட்டியல் இது.

10. கவண்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான கவண் மீடியாக்களில் நடக்கும் குளறுபடிகளை ஆர்ப்பாட்டமாகச் சொன்ன திரைப்படம். ஆர்ப்பாட்டம் என்பதை இயல்புக்கு மீறி அதீதமாக என்று எடுத்துக் கொள்ளவும். ஆனால், படம் தப்பித்தது. தயாரித்தவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் கையை கடிக்கவில்லை. அந்தவகையில் கவணுக்கு பத்தாவது இடம்.

9. மகளிர் மட்டும்
பிரம்மா இயக்கத்தில் வெளிவந்த மகளிர் மட்டும் சில ஆச்சரியங்களை கொண்டிருந்தது. திருமணத்துக்குப் பின் பெண்கள் தங்களது சிறகை இழந்து முடங்கிப் போவதை வலிமையாகவே இயக்குனர் பிரம்மா காட்சிப்படுத்தியிருந்தார். பிரச்சனை ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் பிரதிபலிக்கும் செயற்கைத்தனம். அவரை சிறந்தவராக காண்பிக்க மற்றவர்களை முட்டாள்களாக்கிய கமர்ஷியல் சினிமாவின் அரைபாயில்தனம். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து நல்ல முயற்சி பட்டியலில் மகளிர் மட்டும் படத்தை சேர்க்கலாம்.

8. துப்பறிவாளன்
மிஷ்கினின் கிளேஷக்கள் நிறைந்த திரைமொழியில் வெளிவந்த திரைப்படம். ஷெர்லாக் ஹோல்ம்ஸை வெற்றிகரமாக தமிழுக்கு கொண்டுவந்திருந்தார். பிரசன்னா கதாபாத்திரமும் சிறப்பு. மிஷ்கின் சறுக்கியது திரைக்கதையில். படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் மரணங்கள் கொலைகள் என்பது சாதாரண பார்வையாளர்களே கண்டுபிடிக்கக் கூடியவை. நாயகன் அந்த மரணங்கள் கொலையாக இருக்குமோ என்ற தடயத்தை கண்டடையும்போதே பார்வையாளர்களுக்கு மீதி நிகழ்வுகள் மனதில் படமாக வந்துவிடும். பார்வையாளர்களுக்கு தெரிந்த விஷயத்தை நாயகன் முட்டி மோதி தேடிக்கொண்டிருப்பது துப்பறிவாளனின் குறை. வில்லனை பூடகமாக வைத்து இறுதியில் உரையாடல்களாக அவன் பின்னணியைச் சொல்வதும், கிளைமாக்ஸும் இன்னொரு குறை. இவற்றைத்தாண்டி துப்பறிவாளன் நம்மை என்டர்டெயின் செய்யவே செய்தான்.

7. தீரன் அதிகாரம் ஒன்று
இயக்குனர் வினோத் மற்றும் படக்குழுவின் தீவிர உழைப்பில் உருவான படம். உண்மைக்கதை படத்துக்கு வலுசேர்க்கிறது. வடமாநில கொள்ளைக்காரர்களின் பூர்வ சரித்திரத்தை இத்தனை முறை கூறாமல் ஒரேமுறை இன்னும் சற்று தெளிவுடன் சுருங்கக் கூறியிருக்கலாம். கொள்ளைக்காரர்கள் போலீசாரை ரயிலில் வரவழைப்பதும், திட்டமிட்டு சிக்க வைப்பதும் முதிராக் காட்சிகள். ரயில் பெட்டியின் ஒரே கம்பார்ட்மெண்டின் அந்த வாசலில் வில்லன், இந்த வாசலில் நாயகன். வில்லன் இறங்கி வெட்டவெளியில் ஓடும்போது நாயகன் துப்பாக்கியால் சுட எவ்வளவு நேரமாகும்? படத்தின் இரண்டாம்பாதி வெறும் சண்டையாகிப் போனது தீரனின் பலவீனம்.

6. மாநகரம்
இந்த வருடம் த்ரில்லர் படங்கள் புற்றீசலாக வெளிவந்தன. அதில் கச்சிதமும், வடிவ ஒழுங்கும், அளவான உணர்வெழுச்சியும் கொண்ட படம் மாநகரம். லோகேஷ் கனகராஜ் என்ற அறிமுக இயக்குனரின் முதல் படைப்பு. படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களை, நிகழ்வுகளை ஒரே சரடில் கோர்த்து கதை சொன்னவிதத்தில் 2017 இன் கச்சிதமான கமர்ஷியல் சினிமா என்ற விருதை மாநகரத்துக்கு தரலாம்.

5. அருவி
அருவிக்கு ஏன் ஆறாவது இடம்? அநியாயம் என்று குமுறலாம். அருவின் ஆதாரமான பிரச்சனை அவளுக்கு எய்ட்ஸ் தொற்றுவது. அதற்காக உருவாக்கியிருக்கும் காரணம் செயற்கையானது. ஏன் அப்படி எய்ட்ஸ் வர வழியில்லையா என்றால் வரலாம். ஆனால், அருவியில் அது வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. புகைக்கணும், குடிக்கணும் போல செக்ஸ் வச்சுக்கணும்னு தோணிச்சு. பிடித்தமானவனுடன் வச்சுகிட்டேன். அவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது எனக்கு தெரியாது என்று அருவியால் ஏன் சொல்ல முடியவில்லை? சொல்லியிருந்தால் இப்போது கொண்டாடுவதைப் போல் அருவியை கொண்டாடியிருக்க மாட்டார்கள். அவளுக்கு எதுவுமே தெரியாது, அனைவரும் அவளை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதன் வழியாக வழக்கமான கமர்ஷியல் சினிமா நாயகனை அருவி பிரதியெடுக்கிறாள். அருவியின் பல செயல்கள் பத்து பேரை அடித்துப்போடும் கமர்ஷியல் நாயகனுக்கு இணையானவை. தனக்கு எப்படி எய்ட்ஸ் தொற்றியது என்பதை அறியக்கூட விரும்பாத தந்தைக்கு சிகிச்சை செய்வதற்காக இன்னொருவனுடன் படுத்து ஒரு லட்சம் பெறுகிறாள். பிறகு அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறாள். அடுத்தவர்களின் இக்கட்டை பயன்படுத்தி பாலியல் வல்லுறவு செய்வது தவறு. அதேநேரம், தனது குடும்பம் இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளாது என்பது அருவிக்கு தெரியாதா? ஒருவேளை அந்தப் பணத்தை வாங்கி அதன் மூலம் அவளது தந்தை பிழைத்துக் கொண்டிருந்தால் ஒரு லட்சம் தந்தவனை அருவியால் இதேபோல் குற்றவாளியாக்கியிருக்க முடியுமா? – அவன் அப்போதும் குற்றவாளிதான் என்றாலும் – அருவியால் இதே உறுதியுடன் அவனை குற்றவாளி என்று சொல்லியிருக்க முடியுமா? உதவி இயக்குனர் கதை சொல்லும் போதே படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் அமையப் போகிறது என்பது தெரிந்துவிடுகிறது. முக்கியமாக எய்ட்ஸ் மீதான பயத்தை இந்தப் படம் மீட்டெடுத்திருக்கிறது. அருவியின் நல்ல அம்சங்களுக்கு நிகராக விமர்சனத்துக்குரிய அம்சங்கள் இருக்கின்றன என்பது மட்டுமில்லை, நல்ல அம்சம் என்று சொல்லப்படுவதிலும் விமர்சனத்துக்குரிய அம்சங்கள் இருப்பது முக்கியமானது.

4. ஒரு கிடாயின் கருணை மனு
சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாயின் கருணை மனு, கிராமத்து மனிதர்களுடன் சஞ்சரித்த உணர்வை தந்த படம். குலச்சாமிக்கு கிடா விருந்து படைக்கச் செல்லும் கொண்டாட்ட மனநிலையை அப்படியே கொண்டு வந்திருந்தார். எதிர்பாராமல் நிகழும் கொலையும் அதன் பிறகு வரும் காட்சிகளும் பின்னடைவு. கொலை நடந்த இடத்தில் இப்படியா நகைச்சுவை புரண்டோடும்? இறுதியில் வரும் விலங்குநல ஆர்வல தொனி பொருந்தா அரசியல். சிற்சில குறைகளைத் தாண்டி நல்ல முயற்சி கிடாயின் கருணை மனு.

3. விக்ரம் வேதா
கதை, திரைக்கதையைவிட படத்தின் கமர்ஷியல் வெற்றி விக்ரம் வேதாவுக்கு இந்த இடத்தை தந்திருக்கிறது. கோட்டின் இந்தப் பக்கம் நேர்மையின் பக்கம் நிற்கும் போலீஸ் அதிகாரி. அந்தப் பக்கம் அநியாயத்தின் பக்கம் நிற்கும் குற்றவாளி. குற்றவாளி வந்து ஒரு கதை சொல்கிறான். கோடு கலைய ஆரம்பிக்கிறது. குற்றவாளி ஒவ்வொருமுறை கதை சொல்லும் போதும் கோட்டிற்கு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நிற்பவர்கள் மாறுகிறார்கள். கடைசியில் அங்கு கோடேயில்லை, போலீஸ், குற்றவாளி அனைவரும் நிற்பது ஒரு வட்டத்தில் என்பதை போலீஸ் அதிகாரி புரிந்து கொள்கிறான். விக்ரம் வேதாவின் இந்த சட்டகம் அருமை. ஆனால், அதில் இட்டு நிரப்பியிருக்கும் கதை, சம்பவங்கள் அனைத்தும் மேலோட்டானவை, லாஜிக் மீறில்களை கொண்டவை. ஆனால் தயாரித்தவர், வாங்கியவர், திரையிட்டவர் என முத்தரப்பினருக்கும் படம் லாபம் சம்பாதித்து தந்தது.

2. அறம்
சமூகப் பிரச்சனையை நேர்மையாக சொல்ல முற்படுகையில் மைய கதாபாத்திரத்தை நல்லவர்களாக காட்டி, மற்றவர்களின் குறைகளைப் பேசுவது வழமையான பாணி. மைய கதாபாத்திரமான கலெக்டர் சகல அருங்குணங்களையும் கொண்டவர். ஒருவர் உண்மையிலேயே சமூகப் பிரச்சனையை களைய முற்பட்டால் முதலில் வேரோடு களைய வேண்டியது, மொத்த கூட்டத்தில் ஒருவர் மட்டும் நல்லவர் என்ற கிளிஷேயை. ஆனால் நமது சமூக அக்கறைப் படங்கள் இந்த கிளிஷேவில்தான் கட்டியெழுப்பப்படுகின்றன. அறமும் அந்த சகதியில்தான் முளைத்திருக்கிறது. மதிவதனியான நான் என்ற பின்னணி குரலுடன் அறம் முடிகிறது. அறத்தின் அடுத்தப் பாகத்தில் மதிவதனி அரசியல்வாதியாகி பதவியேற்கும் போது அரசியல்வாதி மதிவதனி அனைத்து நற்குணங்களும் கொண்டவராகி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கெட்டவர்களாவார்கள். இதுதான் அறம் படங்களின் அபாயம். இந்த மையப் பிரச்சனையைத் தாண்டி மக்களின் குரலை ஒலித்ததில் (அதைவிட முக்கியமாக) ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கியதில் அறம் கவனிக்க வைக்கிறது.

1. பாகுபலி 2
கதை, கதாபாத்திரங்கள், பதவியில் இருப்பவர்களின் அதிகாரச் சண்டை, அவர்களுக்கு பணிந்து நிற்கும் குடிகள் என்று பாகுபலி 2 படத்தின் ஒவ்வொரு பிரேமும் அரசியல்ரீதியாக ஆபத்தானது. தனது வழக்கமான படங்களில் ஹீரோயிசத்தை உச்சத்துக் கொண்டு செல்வதை பாகுபலி2 படத்திலும் செய்திருக்கிறார் ராஜமௌலி. இதில் கூடுதலாக ஆன்மீகத்தை துணைக்கழைத்திருக்கிறார். (முதல்பாகத்தில்) யானையே தூக்க சிரமப்படும் சிவலிங்கத்தை நாயகன் அனாயாசமாக தோளில் சுமந்து வருவதை ஏன் பார்வையாளர்கள் கேள்வியே கேட்காமல் ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொள்கிறார்கள்? நாயகன் சிவலிங்கத்தை தோளில் வைத்து நடக்கத் தொடங்கியதும் பின்னணியில் மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன. என்னடா பண்றே என்று அம்மா வாயை திறப்பதற்குள் அங்கிருக்கும் சாமியார் அவளை அடக்குகிறார். அது தெய்வகாரியம் என்ற தொனி அவரது உடல்மொழியில். கூடுதலாக சங்கை எடுத்து சங்கநாதம் முழங்குகிறார். நாயகனின் செயல் வெறும் வீரமல்ல அதையும்தாண்டிய தெய்வ சித்தம் என்பது ஆழப்பதிய வைக்கப்படுகிறது. ஆன்மீகத்துடன் குழைத்து பிரமாண்ட தேரை நாயகன் யானையின் முன் விசிறியடிக்கும்போதும் இதே மனநிலைதான் பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. பாகுபலி 2 படத்தின் இந்தியா தழுவிய வெற்றிக்கும், நம்ப முடியாத நாயகனின் சூப்பர்மேன் சாகசங்களை ரசித்ததற்கும் இதுவே முக்கிய காரணம். ஆனால், இதனை சாத்தியப்படுத்த நடிகர்கள், கலை இயக்கம், கிராபிக்ஸ் முதற்கொண்டு அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறார் ராஜமௌலி. மகாதீரா, நான் ஈ என்று ஒவ்வொரு படியாக முயன்றிருக்கிறார். தனது ஆள்களையே திறனுnட்டியிருக்கிறார். மக்களின் ஆன்மீக மற்றும் ரசனை(பலவீனங்)களினுnடாக தான் சொல்ல வந்த கதையை அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும், ரசிக்க வைக்க முடியும் என்ற அவரது நம்பிக்கையே பாகுபலி 2 படத்தின் பிரமாண்ட வசூல். பாகுபலி 2 எப்போதேனும் அரிதாக நிகழும் பிரமாண்ட நிகழ்வு. எதிர்க்க வேண்டியது பல இருந்தாலும் கொடுத்தே ஆக வேண்டியிருக்கிறது முதலிடம்.

இதையும் படியுங்கள்: இப்போதுவின் தலைப்புச் செய்திகள்: பாஜகவில் குழப்பம்; அரசியல் காட்சிகள் மாறுகிறதா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்