2014 Vs 2019 ; குற்றவழக்கு பின்னணிக் கொண்ட எம்.பி.க்கள் 26 % அதிகமானது ; பாலியல் குற்றச்சாட்டு, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் 29 %

0
325

மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 43 % பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது. 


கடந்த 2014 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 26 % பேர் மீது குற்ற வழக்குகள் இருந்த நிலையில், இம்முறை அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.  தேர்தல் வெற்றி பெற்ற 539 எம்.பி.க்களில் 233 எம்.பி.க்கள் மீது அதாவது 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.  அதாவது அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் அளவு கடந்த 2009-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019-ம் ஆண்டில் 109 சதவீதம் அதிகரித்துள்ளது.


இதில் பாஜகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 116 எம்.பிக்கள், அதாவது 39 % எம்.பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.  இதேபோல, காங்கிரஸில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  29 எம்.பிக்கள் (57 %) மீதும், ஐக்கிய ஜனதா தளத்தில் 13 எம்.பிக்கள் (81 %) மீதும், திமுகவில் 10 எம்.பிக்கள் (43 %) மீதும், திரிணமூல் காங்கிரஸில் 9 எம்.பி.க்கள் (41 %) மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
இதில் பாலியல் குற்றச்சாட்டு, கொலை மற்றும் கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் வழக்குகளில் 29 % எம்.பிக்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 


கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 185 எம்.பிக்கள் மீது (34 %) குற்ற புகார்களும், 112 எம்.பி.க்கள் மீது கடும் குற்ற வழக்குகளும் பதிவாகியிருந்தன. 


அதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 162  எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகளும் பதிவாகி இருந்தன.


தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், பாஜக எம்.பிக்கள் 5 பேர், பகுஜன் சமாஜ கட்சி எம்.பிக்கள் 2 பேர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா ஒரு எம்.பி. மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 


அவர்களில், போபால் தொகுதியின் பாஜக எம்.பி.  பிரக்யா சிங் தாக்குர் 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். 

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களில் 29 சதவீதம் அதாவது 159 பேர் மீது பலாத்காரம், கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற வழக்குகள் இருக்கின்றன.

இதே பிரிவுகளில் கடந்த 2014-ம் ஆண்டில் 112 எம்.பி.க்கள்(21 சதவீதம்) மீதும், 2009-ம் ஆண்டில் 76 (14 சதவீதம்) எம்.பி.க்கள் மீது மட்டுமே வழக்குகள் இருந்தன. அதாவது அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் அளவு கடந்த 2009-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019-ம் ஆண்டில் 109 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இடுக்கி எம்.பி. டீன் குரியகோஸ் மீது அதிகபட்சமாக 204 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இவர் மீது அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், கொள்ளை, குற்றச் சதி, கொலை உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன.

வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட எம்.பி.க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 பேரும், ஒய்எஸ்ஆர் கட்சியில் ஒரு எம்.பி.யும்,  பாஜக சார்பில் 5 எம்.பி.க்களும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here