இந்தியப் பொருளாதாரம் தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் அமர்த்யா சென் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்னோக்கி பயணிப்பதால் மோசமான பொருளாதாரம் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று அமர்த்யா சென் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமர்த்யா சென், இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகக் கூறப்பட்டபோதிலும், 2014ஆம் ஆண்டில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் , பூடான் ஆகிய நாடுகளில் இருபதாண்டுகளுக்கு முன் பொருளாதரத்தில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக இந்தியா விளங்கியது . இப்போது மோசமான பொருளாதார நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளதாக அமர்த்யா சென் தெரிவித்தார்.

இந்த அரசு சமத்துவமின்மை மற்றும் சாதி அமைப்பின் சிக்கல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்பி வருகிறது என்று தெரிவித்தார். சமூகத்தின் ஒரு பிரிவினரையும், கழிவுகளை தங்கள் கைகளாலேயே அகற்றும் மக்களையும் அரசு புறக்கணிக்கிறது என்றும் தெரிவித்தார்.