2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்கு தொடர்பில்லை என விடுவித்ததை எதிர்த்து முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜாகியா ஜாப்ரி என்ற தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

குஜராத் கலவரத்தின்போது குல்பர்க்கா சொசைட்டி எனுமிடத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தொடர்பான வழக்கை விசாரித்த எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம், 24 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

3

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த கலவரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. நவம்பர் 19-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, எஸ்ஐடி அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார், அதை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேகவர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீவைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினார்கள். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது.

அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஈஷான் ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு(எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

அந்தச் சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012-ஆம் ஆண்டு, டிசம்பர் 8-ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் அப்போது முதல்வராக இருந்த மோடி, போலீஸ் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 59 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என அறிக்கையில் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, ஆர்வலர் தீஸ்தா ஸெடெல்வாட் , குடிமக்களின் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பு ஆகியோர் சார்பில் எஸ்ஐடி அறிக்கையை எதிர்த்தும், எஸ்ஐடி அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரியும் அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ஜாகியா ஜாப்ரி. ஆனால், உயர் நீதிமன்றமும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து, எஸ்ஐடி அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் குஜராத் கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு மோடி உள்ளிட்ட பலர் குற்றமற்றவர்கள் என சான்று அளித்துத் தாக்கல்செய்த அறிக்கையை மீண்டும் ஆய்வு அவசியம் இருக்கிறது. ஆதலால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கிறோம், வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்த மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் முன்னிலையில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்ஐடி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார், அவர் வாதிடுகையில்,” ஜாகியாவின் மனு விசாரணைக்கு ஏற்றதல்ல, சமூக ஆர்வலர் தீஸ்தா தீஸ்தா ஸெடெல்வாட்டை 2-வது மனுதாரராகவும் ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.

அதன்பின் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் கூறுகையில், “ஜாப்ரியின் மனுவில் 2-வது மனுதாரராக தீஸ்தா ஸெடெல்வாட்டை ஏற்பது குறித்து அவரின் மனுவைப் பார்த்தபின் முடிவு செய்யலாம். இந்த மனுவைச் சிறிது நாட்களுக்குப் பிறகு விசாரணைக்கு ஏற்கிறோம். வரும் 26-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்கிறேன் “ எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்