எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 வெளியாகியிருக்கிறது. எந்திரனில் உள்ள வசீகரன், சிட்டி இதில் இருந்தாலும் 2.0 எந்திரன் படத்தின் தொடர்ச்சியல்ல, முற்றிலும் புதிய கதை.

சென்னையில் திடீரென்று செல்போன்கள் காணாமல் போகின்றன. செல்போனுடன் தொடர்புடைய ஒரு கடைக்காரர், ஒரு தொழிலதிபர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆகியோர் கொல்லப்படுகின்றனர். இவர்களின் மரணத்துக்கும் செல்போனே காரணமாகிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? அரசு குழம்புகிறது. விஞ்ஞானி வசீகரன் உள்பட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. வசீகரன் காரணத்தையும், அதற்கு காரணமான நபரையும் கண்டுபிடிக்கிறார். அந்த தீய சக்தியுடன் வசீகரனின் ரோபோக்கள் மோதி நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகின்றன.

வசீகரன், சிட்டி, சிட்டி 2.,0 குட்டி 3.0 என பல வடிவங்களில் ரஜினி வருகிறார். எமி ஜாக்சனைப் பார்த்து ‘வாவ்’ என்று ரொமான்டிக்காக உதட்டைச் சுழித்தும், பறவையைப் போல் குரலெழுப்பி நையாண்டி செய்தும் தனது ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். குட்டி 3.0 ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ். பறவை ஆய்வாளர் சலீம் அலியை அக்ஷய் குமாரின் பக்ஷிராஜன் கதாபாத்திரத்துக்கு நகலெடுத்திருக்கிறார்கள். பறவைகள் மீதான அவரது அன்பும், அவை அழியாமல் இருக்க போராடுவதுமான பிளாஷ்பேக் காட்சிகள் இதம். படத்தின் (சற்றே) உயிரோட்டமான பகுதியும் இதுவே.

அழகு பதுமை எமி ஜாக்சனுக்கு ரோபோ கதாபாத்திரம். இதைவிட கச்சிதமான கதாபாத்திரம் எமிக்கு இனி அமையாது. ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எது பண்ணாலும் தப்பில்லை’, ‘வட போச்சே’ என்று பாப்புலர் சினிமா வசனங்களை பொருத்தமான இடத்தில் பேசும் புத்திசாலி ரோபோ.

இந்தியாவில் சங்கர் தவிர்த்து வேறெnரு இயக்குநரால் இப்படியொரு பிரமாண்ட விஎஃப்எக்ஸை (விஎஃப்எக்ஸ்தான் கதையல்ல) கற்பனை செய்ய முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பும், மெனக்கெடலும் தெரிகிறது. சங்கரின் கனவை கட்டியெழுப்பியதில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் பங்கு அதிகம். ராஜாளி பறந்துவரும் தெருக்கள், கட்டிடங்கள் அனைத்தும் முத்துராஜின் கைவண்ணம். படத்தில் ஒரேயொரு பாடல் பட்டும் படாமலும் வந்து போகிறது. மூன்று பேர்கள் கொலை செய்யப்படும் காட்சிகள், சிட்டி 2.0 வெர்ஷனின் அறிமுகம் என சிற்சில பில்டப் காட்சிகளில் ரஹ்மானை உணர முடிகிறது. சிஜியின் ஆதிக்கத்தால் ஆக்ஷன் காட்சிகளை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

2.0 விஎஃப்எக்ஸ் பிரமாண்டத்தில் நகரும் படம். கதை ஒரு பொருட்டில்லை. எனினும், பறவைகள் மீது அதீத அன்பு கொண்ட, அவற்றை பாதுகாக்க நினைக்கும் ஒருவர் சாதுவான பறவைகளின் துணையுடன் மனிதர்களை அழிக்கும் தீய சக்தியாக மாற முடியுமா என்ற அடிப்படையான கேள்வி எழுகிறது. தேவர்கள் எவ்வளவு கெட்டது செய்தாலும் அவதாரங்களால் காப்பாற்றப்படும், எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அரக்கர்கள் அழிக்கப்படும் புராண முரணை கதை நினைவூட்டுகிறது. அதேபோல் இறந்து போகும் ஒருவருக்கு எப்படி இவ்வளவு அமானுஷ்ய சக்தி என்பதற்கு நியூட்ரான், எலெக்ட்ரான், ஆரா என்று ஆன்மிகத்தையும், அறிவியலையும் குழைத்து ஒரு கதை சொல்கிறார்கள். அதனை நம்பவைக்க பல புள்ளி விவரங்கள். ஆகா, எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று இதனை பாராட்டாகவும் சொல்லலாம். செத்தார், இப்போ ஆவியா வந்தார்னு சிம்பிளா சொல்லியிருந்தா மட்டும் நம்பாமலா இருக்கப் போறோம் என்று விமர்சனமாகவும் வைக்கலாம்.

பெரும்பாலான காட்சிகள் சுவாரஸியமில்லாமல் அமெச்சூராக நகர்கின்றன. ஒரு நகரத்தின் ஒட்டு மொத்த செல்போன்கள் காணாமல்போய், இரண்டு பேர் செல்போன்களால் கொல்லப்பட்டு அடுத்த டார்கெட் நாம்தான் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கு தெரிகிறது. இந்த நேரத்தில் காணாமல் போன அவரது செல்போன் மட்டும் அவர் முன்னால் வந்து விழுகிறது. நியாயப்படி எவ்வளவு பதறியிருக்க வேண்டும்? மந்திரின்னு பயந்து போய் என் போனை மட்டும் போட்டுட்டான் போலிருக்கு என்கிறார். அசடு அமைச்சரா இல்லை பார்க்கிறவர்களா.

பேசிக் கொண்டிருக்கும் போதே கையிலிருக்கும் போன் பறந்து காணாமல் போகிறது. ஒரு போன் அல்ல. ஒட்டு மொத்தமாக ஒரு நகரத்தின் லட்சக்கணக்கான செல்போன்கள். இது நடந்த உடனே ஆயிரக்கணக்கில் திரண்டு போய் செல்போன் காணலை என்று போலீஸில் புகார் தருகிறார்கள், புது செல்போன் வாங்க கடையில் முண்டியடித்தபடி, ‘செல்போன் இல்லாம ஒருநாள் கூட இருக்க முடியலை இல்ல’ என்று கதை பேசுகிறார்கள். யாருக்கும் கையிலிருந்த செல்போன் எப்படி பறந்தது என்ற க்யூரியாசிட்டி கொஞ்சமும் இல்லை. சிற்சில இடங்கள் தவிர்த்து வசனத்திலும் இதே அமெச்சூர்த்தனம்.

2.0 இன் 3டி தமிழுக்கு புது அனுபவம். காட்சிகளை முப்பரிமாணத்தில் பார்ப்பது ஒருவித பரவசம் என்றால், 2டியில் பிரமாண்டமாக தெரியும் காட்சிகள் முப்பரிமாணத்தில் சற்றே சிறுத்து மினியேச்சரை போல் தெரிவது உறுத்தல். அதிலும் சிஜி காட்சிகளில் இந்த மினியேச்சர் அனுபவம் சற்று தூக்கல். இறுதிக்காட்சியில் அக்ஷயும், ரஜினியும் ராட்சஸ உருவில் போடும் சண்டையில் விஎஃப்எக்ஸின் பலவீனம் பளிச்சென்று தெரிகிறது.

2.0 – தொழில்நுட்பத்தின் பிரமாண்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here