பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதில் முதல் நாளில் 3 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன என்றும், இப்போராட்டத்தால் ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியதால் விட்டதால் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்,சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும்,3ஆம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை லாரி உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே திட்டமிட்டபடி நாடு முழுவதும் நேற்று(வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என்று தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் அங்கம்வகிக்கும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தனராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- “தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளன.

இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்படும். வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, பருப்பு வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டுவருவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்.

இன்னும் 2 தினங்களில் போராட்டம் தீவிரமடையும். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை, சுங்கக்கட்டணம், காப்பீடு கட்டண உயர்வு எங்களை மட்டுமல்ல பொதுமக்களையும் பாதிக்க கூடியவை தான்.

எனவே நாங்கள் மக்களுக்கும் சேர்த்து தான் போராடுகிறோம். ஆகவே மக்கள் சிரமத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வுகாண வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

இப்போராட்டம் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 2.5 கோடி முட்டைகள் தேக்கமடைந்து இருப்பதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த எண்ணிக்கை சனிக்கிழமை காலை 5 கோடியாக அதிகரித்து விடும் எனவும் அவர்கள் கூறினர்.

இதேபோல், லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் ஜவுளி, ஜவ்வரிசி, வெற்றிலை, தேங்காய் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்து இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வேலை நிறுத்தத்துக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாடெங்கும் சரக்குப் போக்குவரத்து முடக்கப்பட்டு கடும் நெருக்கடி உருவாக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here