பீகார் மாநிலத்தின் புதிய டிஜிபியாக கிருஷ்ண ஸ்வரூப் திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாகல்பூர் கலவரம் எப்போது நடந்தது?

பீகார் மாநிலம் பாகல்பூரில் கடந்த 1989ஆம் ஆண்டு நடைபெற்ற ஷிலா பூஜை (விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அனைத்துப் பகுதியிலிருந்தும் கட்டுமானத்திற்கான கற்களைப் பெற்றனர். அவ்வாறு பெற்ற அந்தக் கற்களுக்கு இந்துத்துவா அமைப்பினர் பூஜை நடத்தினர்) ஊர்வலத்தினைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது.

இந்தக் கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் 900 பேர் முஸ்லிம்கள். மேலும் இந்தக் கலவரத்தினால் 250 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு அஞ்சி பாகல்பூரை விட்டு வெளியேறினர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான இனக் கலவரமாக இது கருதப்பட்டது.

டிஜிபியாக திவேதி நியமிக்கப்பட்டதை எதிர்ப்பது ஏன்?

1989ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மோசமான இனக்கலவரமானது இரண்டு மாதங்கள் வரை நீடித்தது. அப்போது பாகல்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர்தான் கிருஷ்ண ஸ்வரூப் திவேதி. 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்குக் காரணமான இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது. இந்தக் கலவரம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.என்.பிரசாத் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய விசாரணைக் கமிஷன் இரண்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்தது.

அதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மீது அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தக் கலவரத்துக்கு போலீசாரும் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பாக ஐஜிபி தோரே மற்றும் எஸ்பி திவேதி ஆகியோருக்கு கலவரத்தில் பங்கும் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தக் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் சரணடைந்த நிதிஷ்குமார்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மாநிலத்தின் முதல்வராகவுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுஷில் குமார் மோடி மாநிலத்தின் துணை முதல்வராகவுள்ளார்.

nitish

இந்நிலையில் பாகல்பூர் மாவட்டத்தின் எஸ்.பி.யாக இருந்த திவேதி, தற்போது பீகார் மாநிலத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா, திவேதியை டிஜிபியாக நியமித்ததன் மூலம் நிதிஷ்குமார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சரணடைந்து விட்டார் என்பதற்கு ஓர் உதாரணமாகும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர், 1989ஆம் ஆண்டு பாகல்பூரில் நடந்த கலவரத்தைக் கண்ட பலருக்கு இது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இது விளிம்புநிலை மற்றும் சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை முற்றிலும் அழித்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை மறுத்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நித்யானந்த் ராய், திவேதி நேர்மையான அதிகாரி என்றும், அதனால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் அவரைக் கண்டு பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Source: thewire

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்