மத்திய மாநில அரசுகளே என் சாவுக்கு காரணம் – கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்

0
691

ஈரோட்டில் சிறு தொழில் நடத்தி வந்த தொழிலதிபர் ஒருவர் மத்திய, மாநில அரசுகளே தன் தற்கொலைக்கு காரணம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கனகராஜ் (47). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கனகராஜ், சக்தி நகரில் 16 பவர்லூம் தறிகள் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். சமீபகாலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கனகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் மொக்கயைம்பாளையம் சென்ற கனகராஜ் அப்பகுதியில் இருந்த பொது கிணற்றருகில் தனது வண்டியை நிறுத்திவிட்டு திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அந்தப் பகுதியில் நீண்டநேரமாக மோட்டார் சைக்கிள் நிற்பதைப் பார்த்த பொதுமக்கள் சந்தேகமடைந்து தேடிய பின்னரே கனகராஜ் கிணற்றில் குதித்த விபரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தகலறிந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் போலீசார் தொழிலதிபர் கனகராஜ் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கனகராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு தன் கைப்பட கடிதம் எழுதியதாக ஒரு கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் “என் இனிய அன்பு நண்பர்களே ஜவுளித் தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது என கூறப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கடிதம் உண்மையில் கனகராஜ் எழுதியது தானா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் நஷ்டமடைந்ததால் வங்கியில் பெற்ற கடனை அடைக்கமுடியாமல் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 https://www.kalaignarseithigal.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here