பிரதமர் நரேந்திர மோடி கடைப்பிடிக்கும் தவறான கொள்கையால் இந்திய மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பல ஆலோசனைகளைக் கடிதம் மூலம் வழங்கி இருந்தது. அதில் முக்கியமானது, ’45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் கரோனா தடுப்பூசியைத் தற்போது செலுத்தி வருகிறோம்.

ஆனால், கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருவதால், நம்முடைய தடுப்பூசி செலுத்தும் முறையைப் போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்தி, மாற்றி அமைக்க வேண்டும்.

ஆதலால், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு அனுமதியளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் இலவசமாகத் தடுப்பூசியை கொரோனா தடுப்பூசி மையத்தில் செலுத்திக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும் பணியில் தனியார் மருத்துவமனை, சிறிய கிளினிக் போன்றவற்றையும் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழைக் கொண்டு வருவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தனிநபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தொற்று நோயின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் மந்தத் தடுப்பாற்றலையும் ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்திருந்தது.

ஆனால், மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ’18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம் இது.

அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

மோடி அரசைப் போல் உலகில் எந்த ஜனநாயக அரசும், இதுபோல் கொடூரமாக, உணர்வற்று இருந்தது இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல், தடுப்பூசி முகாம் வரை, பாஜக, மற்றும் மோடி அரசின் தவறான கொள்கைகளால், மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறார்கள்”.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘தேர்தல் வாக்குறுதியில் இலவசமாகத் தடுப்பூசி என்று அறிவித்திருந்ததால், இப்போது அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி என்பதை அறிவிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here