18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு: 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; 3வது நீதிபதிக்கு மாற்றம்

0
155

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரு நீதிபதிகளும், இரு வேறு தீர்ப்புகளை அளித்துள்ளனர்.இதனால் 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்த வழக்கில், சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.

18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார் .

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவது வழக்கம்.

இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும், 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்த வழக்கின் பின்னணி

டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று கூறி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, பேரவைத் தலைவர் தனபால் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார் .

இந்த 18 எம்.எல்.ஏ.-க்களும், தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த மனுவில் சட்டப்பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சில ஆவணங்களைத் தர வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கோரியிருந்தோம். அந்த ஆவணங்களைக் கொடுத்தால் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருந்தோம். ஆனால், நாங்கள் கேட்ட ஆவணங்களை பேரவைத் தலைவர் அளிக்கவில்லை என்று 18 எம்.எல்.ஏ.-க்களும் தெரிவித்தனர் .

பேரவைத் தலைவரின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இது போன்ற சூழ்நிலைகளில் பேரவைத் தலைவரின் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கதல்ல. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, எங்களைத் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் ஒரு நீதிபதி தகுதி நீக்கத்தைச் செல்லும் என்றும் மற்றொரு நீதிபதி தகுதி நீக்கத்தைச் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர் . இந்த மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதியிடம் வழக்கு விசாரணைக்குச் செல்கிறது .

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்