பொருளாதார மேதை அமார்த்யா சென். 1998இல் மக்கள் நல பொருளாதார ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றார்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 1998இல் பெற்ற அமார்த்யா சென்னுக்கு 85 வயதாகிறது. பஞ்சங்களையும் மக்கள்நல பொருளாதாரத்தையும் ஆய்வு செய்து தமிழ்நாட்டின் மக்கள் நல பொருளாதார முன்மாதிரியைப் பாராட்டியவர் அமார்த்யா சென். நியூயார்க்கர் இதழுக்கு இந்தியா பற்றிய அச்சங்களையும் நம்பிக்கைகளையும் விளக்கி நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதிலிருந்து சில துளிகள்:

இந்தியா சுதந்திரமடைந்துவிட்டால், எந்த முகாந்திரமும் இல்லாமல் மக்களைத் தடுப்புக் காவலில் வைக்க மாட்டார்கள் என்று எனது தாத்தா நம்பினார். ஆனால் இன்றைக்கும் எந்தக் காரணமும் இல்லாமல் மக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) புதிய வடிவம் எந்தத் தனிநபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க இடமளிக்கிறது. ஜனநாயகம் என்பது விவாதங்கள், உரையாடல்கள் மூலமாக அரசாங்கத்தை நடத்திச் செல்வதாகும் என்று ஜான் ஸ்டூவர்ட் மில் சொல்லியிருக்கிறார். அச்சத்தின் வழியாக ஆள்வது ஜனநாயகமாகாது. முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இந்தியாவில் அச்சத்தின் மூலமாக ஆட்சி செய்ய மோடி நினைக்கிறார். நாளிதழ்களை, தொலைக்காட்சிகளை சுதந்திரமாக இயங்க விடாமல் ஆட்சி செய்வது பெரிய வெற்றியாகாது.

இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள், 20 கோடி தலித்துகள், 10 கோடி ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். இந்துக்களில் கணிசமான பகுதியினர் பகுத்தறிவாளர்கள். இந்த நிலையில் மோடி மக்களின் செல்வாக்கைப் பெற்றவர் என்று தெளிவாக சொல்ல முடியாது. தேர்தல் முறையில் உள்ள சின்னக் குறைகளைப் பயன்படுத்தியும் ஊடகங்களை அச்சத்துக்குள்ளாக்கியும் பெறும் செல்வாக்கை நாம் பெருவாரியான செல்வாக்குஎன்று கருத முடியாது. துணிவான சில நாளிதழ்கள், துணிவான சில தொலைக்காட்சிகள், தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்கள் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை அளிப்பவையாக இருக்கின்றன.

உச்ச நீதிமன்றமும் ஜனநாயகத்தைப் பேணிக் காக்க முடியும். அது மிகவும் மெதுவாக செயல்படுகிறது. இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்த பின்னர் எதிர்க்கட்சிகள் அவரை வீழ்த்தினார்கள். இந்திராகாந்தி தனது சர்வாதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் சூழல் உண்டானது. எனவே சர்வாதிகார எதிர்ப்புச் சக்திகளை பலப்படுத்துவதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. ஜனநாயகம் ஒளிமயமானதுதான்.அதனை நாம்தான் அச்சத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here