ரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம்: 13 நாளில் ரூ.2,536 வரை அதிகரிப்பு

0
939


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.29 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.29,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 13  நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,536 வரை உயர்ந்துள்ளது. பவுன் விலை, விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை (ஆக.7)  விலை ரூ.28 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது.

இந்தநிலையில், தங்கம் விலை செவ்வாய்க்கிழமை ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.29,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து, ரூ.3,627-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை மொத்தம் 13 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,536 வரை உயர்ந்துள்ளது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.40  உயர்ந்து ரூ.49 – ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ.49,000 ஆகவும் இருந்தது.

டாலரை விற்று தங்கம் வாங்கி குவிப்பு: தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: சீனப் பொருள்களுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிப்பு, அமெரிக்காவில் ஃபெடரல் கூட்டமைப்பு  வட்டி விகிதத்தை குறைத்தது,  பொருளாதார மந்தம், உற்பத்தி குறியீடு, வேலைவாய்ப்பு குறியீடு சரிவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பி,  முதலீடு  செய்ததால் தங்கம் விலை உயர்ந்துவந்தது. இப்போது, ரஷியா, ஹாங்காங், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை தங்களிடம் உள்ள டாலர்களை விற்று, தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இதன்காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன் தாக்கம் உள்நாட்டில் எதிரொலிப்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்றார் அவர்.
 

செவ்வாய்க்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ……………….    3,627
1 பவுன் தங்கம் ………………   29,016
1 கிராம் வெள்ளி ……………..    49.00
1 கிலோ வெள்ளி …………….. 49,000

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here