16 குழந்தைகளைக் கீழறையில் அடைத்து வைத்த பள்ளியின் முதல்வரை எச்சரித்த கெஜ்ரிவால்

0
382

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் சுமார் 16 மழலையர் வகுப்புக் குழந்தைகள் டெல்லியிலுள்ள பள்ளிக் கட்டிடத்தின் கீழறையில்
அடைத்து வைக்கப்பட்டனர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று (வியாழக்கிழமை) 16 குழந்தைகளை அடைத்து வைத்த ராபியா பள்ளியின் முதல்வர் நகீட் உஸ்மானியை கடுமையாக கண்டித்தார்.இது மாதிரியான செயல்களை ஒரு போதும் பொறுத்து கொள்ள முடியாது என்றும் மேலும் இச்சம்பவத்திற்காக டெல்லி அரசும் , போலீஸும் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

ஹாவுஸ் காஸி பகுதியிலுள்ள ஒரு பெண்கள் பள்ளியில் காலை 7:30 முதல் மதியம் 12:30 வரை கடும் வெப்பம் நிலவும் கீழறையில் 16 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். குழந்தைகளுக்கு தாகம், பசி எடுத்தபோதும் ஆசிரியர்கள் அது பற்றி கவலைப்படவில்லை என்றனர் பெற்றோர்.

பெற்றோர்களுள் ஒருவரான ஜியா-உத்-தின், “பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் குழந்தைகள் கீழறையில் பூட்டி வைக்கப்பட்டனர். நான் கட்டணம் செலுத்திவிட்ட போதிலும் எனது குழந்தையையும் தண்டித்தனர். குழந்தைகளுக்கு தாகம் எடுத்தது, வெப்பத்தால் அவதிப்பட்டனர். காவல்துறை எங்களுக்கு உதவியது. கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை காண்பித்த பிறகும் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கேட்கவோ வருத்தப்படவோ இல்லை,” என்றார்.

முஹம்மத் காலித் எனும் மற்றொரு பெற்றோர், “கட்டணம் செலுத்தவில்லை என்றால் குழந்தைகளை ஏன் தண்டிக்கிறீர்கள்? சிறுமிகள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தனர்,” என்றார்.

பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. “சிறுவர் நீதி சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம்,” என்றது காவல்துறை.

மாநில கல்வி துறையும் , டெல்லி போலீஸும் ராபியா பள்ளியில் குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது என்று அறிக்கைகளை சமர்பிக்க டெல்லி பெண்கள் ஆணையம் கேட்டுள்ளது . டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கல்வி துறையிடம் குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது என்று விளக்கம் கேட்டுள்ளார்.

ராபியா பள்ளியின் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here