ஜேயார்

லார்டு லிட்டன் சென்னைக் கவர்னராய் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலம். அவருக்குச் சுதேசிகளிடம் மகா அவநம்பிக்கை. தேஷபாஷைப் பத்திரிகைகளையெல்லாம் அடக்கும் அடக்குமுறைச் சட்டம் ஒன்றை இயற்றினார். ஜனங்களிடம் இருக்கும் ஆயுதங்களையெல்லாம் பிடுங்கி, நிராயுதபாணிகளாக்கும் மற்றொரு சட்டத்தையும் சிருஷ்டித்தார். இவற்றால் சென்னையில் என்றுங் காணாததோர் அரசியல் எழுச்சி பொங்கியது. சங்கத்துக்குச் சங்கம் இந்தக் கொடிய சட்டங்களைப் பற்றித் தர்க்கங்கள் நடந்தன. ஆனால், படித்த இந்தியர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி, படியாத இளைஞர்களுக்கு அரசியல் பிரக்ஞை ஊட்டி, கிளர்ச்சி செய்ய ஒரு நல்ல பத்திரிகையில்லை. அந்தக் குறையை நிவர்த்திக்கத்தான் 1878-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி சென்னையில் தங்கசாலைத் தெரு ‘ஸ்ரீநிதி பிரஸ்’ என்ற அச்சுக் கூடத்தில், காலஞ்சென்ற உத்தம தேச பக்தர் ஸ்ரீ ஜி. சுப்பிரமணியரை ஆசிரியராகக் கொண்டு, ‘ஹிந்து’ பிறந்தது.

திருவல்லிக்கேணி ’’லிட்டரரி ஸொஸைட்டி” (இலக்கியச் சங்கம்) என்ற ஒரு சங்கம். அப்பொழுதுதான் காலேஜ் படிப்பை முடித்து வந்த ஆறு இளைஞர்கள் அதிலே அங்கத்தினர்கள். அவர்களின் பெயர்களாவன: [1] ஜி.சுப்பிரமணிய ஐயர்; [2] டி.டி.ரங்காச்சாரியார்; [3] பி.வி.ரங்காச்சாரியார்; [4] டி.கேசவராவ்பந்த்; [5] என்.சுப்பாராவ்; [6] எம்.வீரராகவாச்சாரி. இந்த ஆறு பேர்களும் சேர்ந்துதான் ’ஹிந்து’வை ஆரம்பிக்கத் தீர்மானித்தார்கள். ஆனால், பணம் வேண்டாமா? ஆறு பேரும் அப்பொழுதுதான் படிப்பு முடிந்த வாலிபர்கள். ஆறிலும் மூவர் மீண்டும் சட்டக்கல்லூரியில் படிக்க நுழைந்துவிட்டார்கள். ஜி.சுப்பிரமணிய ஐயரும், எம்.வீரராகவாச்சாரியாரும்தான் உபாத்தியாயர்களாகிச் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். ஆகையால் பத்திரிகை நடத்தும் பொறுப்பு பெரும்பகுதியும் அவ்விருவர் மீதுமே விழுந்தது. ‘ஹிந்து’ ஒரு வாரப் பத்திரிகையாக ஆரம்பமாகி, காலக்கிரமத்தில் வாரம் மும்முறையுமாயிற்று.

ஆரம்பத்திலேயே ’ஹிந்து’ சிறந்த தேசத்தொண்டு புரிந்து வந்தது. அதன் செல்வாக்கும் விருத்தியடைந்து வந்தது. சென்ற வருஷம் வரையில் ’ஹிந்து’ ஆபீஸ் இருந்து வந்ததே அந்த மெளண்ட்ரோடு 100-ஆம் நம்பர் கட்டிடத்தை முதன் முதலாக 1883-இல் வாடகைக்குப் பிடித்து, அங்கு ‘ஹிந்து’வுக்கென்று பிரத்தியேகமாக ஓர் அச்சுக் கூடத்துக்கு ‘நேஷனல் பிரஸ்’ என்று பெயர் சூட்டினார்கள்

இந்த ‘ஹிந்து’ ஆபீஸில்தான் வெகுகாலம் வரை சென்னை மஹா ஜனசபைக் கூட்டங்கள் நடந்து வந்தன. அரசியல் கிளர்ச்சிகளில் எல்லாம் ’ஹிந்து’ பெரும் பங்கெடுத்துக் கொண்டது. குறையுள்ள எவரும் மவுண்ட்ரோடு 100-ஆம் நம்பர் கட்டிடத்துக்கு வந்து விடுவார்கள். ஆகையால், ‘சாதிக்காரர் குகை’ என்ற பெயரும் அந்தக் கட்டிடத்துக்குக் கிடைத்தது. ‘ஹிந்து’ ஆபீஸிலிருந்து பற்பல பிரச்னைகள் குறித்தும் ஏராளமான துண்டு பிரசுரங்கள் கிளம்பி ஊரெல்லாம் பறக்கும். 1887-ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியத் தேசீயக் காங்கிரஸ் கூடியபோது, காங்கிரஸின் நோக்கங்களையும் சக்தியையும் விளக்கிய பல துண்டு பிரசுரங்கள் ‘ஹிந்து’ ஆபீஸிலேயே தயாராயின. காங்கிரஸ் நிகழ்ச்சி நேரம் போக மீதி வேளையெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் ‘ஹிந்து’ ஆபீஸில்தான் கூடிப் பேசுவார்கள்.

இந்தியாவில் வாரம் மும்முறைப் பத்திரிகை போதாது என்று, ‘ஹிந்து’ நிர்வாகிகளுக்குத் தோன்றியது. ஆகையால்,1889-ஆம் ஆண்டு முதல் ‘ஹிந்து’ ஒரு தினசரியாயிற்று. ஆனால், இந்துவிற்குப் பண நஷ்டம் ஏற்பட்டது. பத்திரிகை இப்படிச் சிரமத்துடன் நடந்து கொண்டிருந்தாலும், மிகவும் பரோபகாரியான விஜயநகரம் மகாராஜா காலஞ்சென்ற ஆனந்த கஜபதி ராஜாவின் உதவியால், ’ஹிந்து’வுக்கு ஸொந்தமாக மவுண்ட்ரோடு கட்டிடத்தை வாங்கவும் மேலும் அதை விஸ்தரித்துக் கட்டவும் 1892-ஆம் ஆண்டு ஒரு கடன் வசூலிக்கப்பட்டது.

அடுத்த ஐந்து வருஷ காலத்தில், தேசத்தின் அரசியல் கதியில் பெருவேகம் ஏற்பட்டது. பிரபல வக்கீல் எர்ட்லீ நார்ட்டன் பல கட்டுரைகளை ‘ஹிந்து’ வுக்கு எழுதினார். 1897-ஆம் ஆண்டு வெல்பி கமிஷன் முன் சாட்சியம் கொடுக்க, ஜி.சுப்பிரமணிய ஐயர் இங்கிலாந்துக்குச் சென்றார். ‘ஹிந்து’வுக்குப் பேருதவியாக இருந்த விஜயநகரம் மகாராஜா இதற்கிடையில் காலகதியடைந்தார். ஐயர் திரும்பிவந்து ஒரு வருஷ காலம் வரையில் உற்சாகமாக வேலை செய்தார். ஆயினும் ‘ஹிந்து’வின் பண நஷ்டத்தால் அவர் மனந்தளர்ந்தார். வீரராகவாச்சாரியாருக்கும் ஐயருக்குமாக இருந்த கூட்டு 1898-ஆம் ஆண்டு முறிந்தது. ஐயர் விலகினார். ஆச்சாரியாரே பத்திரிகையை நிர்வகித்தார். துணையாசிரியராக அதுவரையிலிருந்த ஸ்ரீ ஸி.கருணாகர மேனன் ஆசிரியர் பதவியை ஏற்றார். 1903-ஆம் ஆண்டு மிக வைபவமாக வெள்ளிவிழாவும் நடந்தது. அன்று தினம் ’ராஜவாழ்த்’துடன் முடிந்த அவ்விழாவைக் கண்ணுற்றவர்கள், இன்று ‘ஹிந்து’ உலகின் தலை சிறந்த பத்திரிகைகளோடு சரிசமமானதாகத் தலை நிமிர்ந்து நிற்பதையும் அதன் தேசீயச் செல்வாக்கையும் நினைத்து மிருக்க மாட்டாரகள்.

பிறகும் ‘ஹிந்து’வின் பணக் கஷ்டம் தீரவில்லை. ஆகையால்,1905-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ஸ்ரீ எஸ்.கஸ்தூரி ரங்கையங்கார் அதை வாங்கினார்; நடத்தும் பொறுப்பையும் தாமே வகித்தார். வீர ராகவாச்சாரியாரையே மானேஜராக அமர்த்திக் கொண்டார். தாம் ஆசிரியரானார். ஸி.கருணாகரமேனனையும் கூட்டாசிரியராக வைத்துக் கொண்டார். ஆனால், ஒரே மாத காலத்தில் மேனன் விலகிக் கொண்டு, நண்பர்களின் உதவியால், ’இந்தியன் பேட்ரியட்’ என்று தனி பத்திரிகை தொடங்கினார். ஆயினும் ‘ஹிந்து’வின் செல்வாக்கு வரவரப் பெருகி வந்தது.

1905-ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் பிறந்த கிளர்ச்சியால் தேசம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.’ ஹிந்து’ மிகத் தீவிரமாக அப்போது சேவைபுரியலாயிற்று. அதுவரையில், பத்திரிகைகளுக்குப் பெரும்பாலும் தபாலில்தான் செய்திகள் வரும்; ஒன்றிரு தந்திகள் மட்டுமே அபூர்வமாக வரும். இக்காலத்தில்தான் முதன்முதலாக, தினசரி தந்தி மூலம் செய்தியனுப்பும் ஸ்தாபனம் ஒன்று ஏற்பட்டது. அதுவே பின்னால் வளர்ந்து ‘அஸோஷியேட்டட் பிரஸ்’ ஆயிற்று.

அடுத்த சில வருஷங்களில், தேசத்தில் பிரமாத எழுச்சி பிறந்தது. தென்னாப்பிரிக்க இந்தியர் துயரம், சுதேசிக் கிளர்ச்சி முதலிய புயல்கள் கிலம்பின. ஸூரத் காங்கிரஸ் பிளவு நேர்ந்தது. மிதவாதிகள் கங்கிரஸிலிருந்து பிரிந்து சென்னையிலே தனி மகாநாடு கூட்டினார்கள். ’’இந்த அனுசிதமான சமயத்திலே சர்க்கார் கைக்கருவிகளாக மிதவாதிகள் ஆகிவிட வேண்டாம்’’ என்று தீரமாக ’ஹிந்து’ எழுதியது. சர்க்காரின் கொடிய அடக்கு முறையையும் கண்டித்தது. மேலும், பெஸண்ட் அம்மையாரின் அடையாறு பிரம்மஞான சங்கத்தின் சில செய்கைகளையும் கண்டித்து எழுதியதால், ’ஹிந்து’வின் மீது ஒரு கிரிமினல் அவதூறு வழக்கும், இரண்டு லட்ச ரூபாய்க்கு இரு நஷ்ட ஈடு வழக்குகளும் வந்தன. கிரிமினல் வழக்கு தள்ளுபடியாயிற்று. ஸிவில் வழக்குகளில் ராஜி ஏற்பட்டது.

1910ஆம் ஆண்டு ஹிந்துவின் சரித்திரத்திலேயே ஒரு புதிய சகாப்தம்’ பிறந்தது. முந்திய நிர்வாகிகள் அதற்கு வைத்துச் சென்ற பந்தகக் கடன்களெல்லாம் தீர்ந்தன. பொதுமக்களின் ஆதரவு வர வர அதிகரித்தது. தொழில் முறையிலும், ’ஹிந்து’ லாபகரமாக நடக்கத் தொடங்கியது. ஐரோப்பிய வியாபாரிகளும் இந்திய ’ஹிந்து’வில் விளம்பரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

1914ஆம் ஆண்டு சென்ற ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கியது. அக்காலத்தில் ’ஹிந்து’வின் உதவியாசிரியராயிருந்த ஸ்ரீ.எ.ரங்கசாமி ஐயங்கார் விலகி, ‘சுதேசமித்தரன்’ ஆசிரியரானார். காரணம், உடல் நிலை நிமித்தமாகச் ’சுதேசமித்தரன்’ ஆசிரியர் பதவியைவிட்டு ஸ்ரீ.ஜி. சுப்பிரமணிய ஐயர் அப்போது விலகிக் கொண்டதுதான். யுத்தகாலத்தில் ’ஹிந்து’ செய்திகள் வெளியிட்ட நேர்த்தியையும் அதன் ஆராய்ச்சிமிக்க தலையங்கங்களையும் சர்க்காரும் ஜனங்களும் ஒரு முகமாகப் பாராட்டினார்கள். மேதையான ஸ்ரீ.எஸ்.ரங்கசாமி அச்சமயம் துணையாசிரியராயிருந்து எழுதிய யுத்த ஆராய்ச்சித் தலையங்கங்கள் பிரம்மிக்கச் செய்வனவாகும்.

கஸ்தூரி ரங்கையங்கார் 1923-ஆம் ஆண்டு காலமாகவே, ஸ்ரீ.எஸ்.ரங்கசாமி ஹிந்துவின் ஆசிரியராகி, அதைத் திறம்பட நடத்தினார். 1926-ஆம் ஆண்டு அவர் காலமாகி விட்டார். கஸ்தூரி ரங்கையங்காரின் குமாரன் ஸ்ரீ.கே.சீனிவாஸனே நிர்வாக ஆசிரியரானார். ஆனால்,1928ஆம் ஆண்டு ஸ்ரீ.எ.ரங்கஸாமி ஐயங்கார், ’சுதேசமித்தரன்’ ஆசிரியர் பதவியைவிட்டு, ‘ஹிந்து’வின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 1934-ஆம் ஆண்டு அவர் காலமானதால், அதுமுதல் ஸ்ரீ.கே.சீனிவாசனே மீண்டும் ஆசிரியர் பதவியேற்று, ஹிந்துவை நடத்தி வருகிறார். ஸ்ரீ.கஸ்தூரி ரங்கையங்காரின் மற்றொரு குமாரரான ஸ்ரீ.கே.கோபாலன் ஹிந்துவின் பிரசுர கர்த்தராக நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.

பின்வரும் வருஷங்களில் ’ஹிந்து’வுக்கு ஜூபிளி விழாக்கள் நடைபெற்றன:

ஆண்டு விழா
1903 வெள்ளிவிழா
1928 பொன்விழா
1939 வைரவிழா

இதுவரை சொல்லிய ’ஹிந்து’வின் சரித்திரச் சுருக்கத்தினின்றும், ‘ஹிந்து’ தேசீய இயக்கத்துக்குப் பேருதவி புரிந்து வந்திருப்பது புலனாகும். அது மாத்திரமல்ல; தேசீய இயக்கத்தோடு, கொள்கையின் தீவிரத்திலும் நவீன வசதிகளிலும் செல்வ நிலையிலும் தானும் பிரமாதமாய் வளர்ந்து, ‘ஹிந்து’ இன்று தமிழனுக்கே பெருமை தரும் உன்னத நிலைமையை அடைந்திருக்கிறது.

ஹிந்துவின் பழைய கட்டிடம் இன்று வேறு பத்திரிகைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. அதைவிட வசதியிலும் அமைப்பிலும் சிறப்பான ’கஸ்தூரி பில்டிங்’ஸில் இன்று ’ஹிந்து’ இருந்து வருகிறது. ’டயமண்ட் விழா’க் காலத்தில் ’ஹிந்து’ இந்தப் புதுமனை புகுந்தது. இதுவும் ஹிந்துவுக்கே ஸொந்தமாகும்; மவுண்ட்ரோட்டில்தான் இருக்கிறது.

’ஹிந்து’வுக்கு இந்தியாவில் மட்டில் சுமார் 150 பேருக்கு மேல் சொந்த நிருபர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீ.பி.சிவராவ் போன்ற சில பிரபலஸ்தர்களும் அதன் நிருபர்கள். ஏற்கனவே லண்டன் நிருபராயிருந்து, 22-வருஷ காலத்தில் 1100 வாரக் கடிதங்கள் வரை எழுதி 1933-ஆம் ஆண்டு விலகிக் கொண்டார் மிஸ்டர் கிரப். அவருக்குப்பின் காமன்ஸ் சபை அங்கத்தினரும் ஒரு ராஜீய வாதியுமான மிஸ்டர் லியனார்டு மாட்டர்ஸ் என்பவர் ஹிந்துவின் லண்டன் நிருபராக இப்போது இருந்து வருகிறார். சீன யுத்த ஆரம்பத்தில், சைனாவின் இணையற்ற தலைவனும் தளபதியுமான சியாங்கே ஷேக்கின் மனைவியே ஹிந்துவின் நிருபராயிருந்து வந்தாள்.

லண்டன் ‘பிளீட் ஸ்ட்ரீட்’ என்ற தெரு உலகப் பிரசித்தமாகும். அங்கேதான் பிரிட்டனின் தலைசிறந்த பத்திரிகைகள் பெரும்பாலானவையும் இருக்கின்றன. 1933-ஆம் ஆண்டு அங்கே ’ஹிந்து’வின் கிளை காரியாலயம் ஒன்று திறக்கப்பட்டது. பம்பாய், கல்கத்தா முதலிய இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், ‘ஹிந்து’வின் கிளைக் காரியாலயங்கள் இருக்கின்றன.

இனி சென்னையிலுள்ள ’ஹிந்து’ காரியாலயத்தைப்பற்றி நான் நேரில் கண்ட சில அம்சங்களை மட்டில் மிகச்சுருக்கமாக விவரிக்க விரும்புகிறேன். நானும் நண்பர் ஒருவரும் ’ஹிந்து’ காரியாலயத்துக்குச் சென்று, எங்கள் விஸிட்டிங் கார்டை அனுப்பினோம். சில நிமிஷ நேரத்தில் ’லிப்’டில் ஏறி, விஸிட்டர் அறை ஒன்றுக்குள் போய்ச் சேர்ந்தோம். நாங்கள் பார்க்க விரும்பிய உதவியாசிரியர் வந்து சேர்ந்தார். காரியாலயத்தைச் சுற்றிக் காட்ட ஒரு நண்பர் எங்களுடன் அனுப்பப்பட்டார்.
முதலில் ‘லைப்ரரி’க்குள் சென்றோம்; ஏராளமான புத்தகங்களும் பத்திரிகைகளும் அங்கிருந்தன. ”வாரத்துக்குக் கொருமுறை இந்தப் புத்தகங்கள், காரியாலய உத்தியோகஸ்தர்களுக்கு இரவல் கொடுக்கப்படுகிறது’’ என்று நண்பர் தெரிவித்தார்.

பிறகு, தொழிலாளர் பிரவேச கேட்டுக்குச் சென்றோம். அங்கே ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒரு ’டிக்கெட்’ விகிதம் பல டிக்கெட்டுகள் இருக்கின்றன. அவரவர் அந்தந்த டிக்கட்டை எடுத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும். அவ்விடத்தில் ஒரு ‘கிளாக்’ இருக்கிறது. அதனடியில் ஒரு பெட்டி இணைந்திருக்கிறது. வெளியே செல்லும் தொழிலாளி, திரும்பி வந்ததும் அந்த ‘க்ளாக்’கில் தனது டிக்கட்டைப் போட வேண்டும். அது தானாக அந்தத் தேதியையும் மணி நேரத்தையும் நிமிஷம் பிசகாமல் முத்திரை குத்திவிடும். இதற்கென்று ஒரு குமாஸ்தாவோ அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரோ கிடையாது; தேவையுமில்லை.

டைப் அடிப்பதுபோல் எழுத்தைக் கோத்துவிடக்கூடிய லெனோ, மானோ மெஷின்கள் சுமார் இருபதுக்குமேல் ’ஹிந்து’வில் இருக்கின்றன. இவற்றிலே ‘இண்டர் டைப்’ மெஷின்தான் மிக முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கது. இந்த மெஷினில், மிகச்சிறிய 8 பாயிண்ட் எழுத்து முதல் 64 பாயிண்ட் எழுத்து வரையில், டைப் அடிப்பது போல் அடித்துக்கோத்துவிடலாம். தலைப்புகள், விளம்பரங்கள் முதலியவைகளை எழுத்துக் கோக்க, கையால் வேலை செய்து அவதிப்பட வேண்டியதில்லை.

இன்று தினம் ராய்ட்டரின் ஸெர்வீஸ் உள்ள பெரும்பாலான தினசரிகளுக்கும் ‘டெலிபிரிண்டர்’ என்ற இயந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சென்னையில் முதன் முதலாக ’ஹிந்து’வுக்குத்தான் சில வருஷங்களுக்கு முன் அந்த இயந்திரம் வந்தது என்று ஞாபகம். ராய்ட்டர் காரியாலயத்தில், செய்திகளை டைப் செய்வார்கள். அங்கே எப்படி டைப் செய்கிறார்களோ அதே மாதிரி அதே நேரத்தில், பல பத்திரிகாலயங்களிலுள்ள டெலிபிரிண்டர்களும் டைப் செய்துவிடும். இதுதான் இந்த ஆச்சரியமான இயந்திரம் செய்யும் வேலை.

ஆனால், மற்றக் காரியாலயங்களிலில்லாத இன்னொரு அதிசயமான கருவியும் ’ஹிந்து’ ஆபீஸில் இருக்கிறது. அதற்கு ‘டெலி கார்டு’ என்று பெயர். ’டிக்டாபோன்’ என்று நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ’டெலிகார்டு” என்ற இந்தக் கருவியை, தந்தி மூலம் வேலை செய்யும் டிக்டாபோன் என்று சொல்லலாம்.

பம்பாய் அல்லது லண்டனிலிருந்து ஒருவர் ட்ரங் டெலிபோனில் ஹிந்து ஆபீசுக்குச் செய்தி சொல்வதாக வைத்துக் கொள்வோம். அதை யாரும் இங்கே கேட்டு, சுருக்கெழுத்தில் எழுதிக்கொள்ளத் தேவையில்லை.
இந்த ‘டெலிகார்டு’ கருவியில், கிராமபோன் பிளேட் போல், குழவி வடிவமுள்ளதொரு சிறிய பிளேட்டில், அந்தப் பேச்சு அப்படியே பதிந்து விடும். ’டெலிகார்டின்’ மற்றொரு கருவியில் அந்தப் பிளேட் உருளையை வைத்து, ஓட்டி, கிராமபோனைப் போலவே அந்தப் பேச்சை எத்தனை முறை வேண்டுமானலும், வேகமாகவோ, மிக மெதுவாகவோ, வார்த்தை வார்த்தையாய் நிறுத்தியோ, ஒரே மூச்சாகவோ கேட்கலாம். சமீபத்தில் நெல்லூர்க் கலக ஆரம்பச் செய்தியை இந்தக் கருவியில்தான் பதிந்து கொண்டார்களாம். .இந்தக் கருவி மூலம் செய்தியை வரவேற்றால், பிசக மார்க்கமில்லை. செய்தியைச் சொன்னவர் “அப்படிச் சொன்னேன்; இப்படிச் சொன்னேன்” என்று பின்னால் மாற்ற முடியாது. எங்களுக்கு இந்தக் கருவியைப் பற்றி விளக்கிச் சொன்ன நண்பர் தமக்குத் தெரிந்தமட்டில், இந்தியாவிலேயே ‘ஹிந்து’ ஒன்றில்தான் இது இருப்பதாக தோன்றுகிறது என்று கூறினார்.

’’ஹிந்து’’வின் புதிய ‘டூப்ளே’’ ரோட்டரி, ஒரு மணி நேரத்தில் ’ஹிந்து’ அளவில் 32-பக்கங்களுள்ள ஒரு பத்திரிகையை 60 ஆயிரம் பிரதிகள் ஏககாலத்தில் அடித்து மடித்துவிடக்கூடியது. அப்படி அடிக்கும்போதே, சில பக்கங்களில் இரண்டு அல்லது மூன்று வர்ணங்களையும் அடிக்கும் வசதி அதில் அமைந்திருக்கிறது. இந்த ஆச்சர்யமான இயந்திரத்தை வர்ணித்துப் பயனில்லை; நேரே பார்க்க வேண்டும். சில சாதாரண மெஷின்கள் கட்டிடமே அதிரும்படி அலறுமே; அப்படியில்லை இது. மகா லளிதமாக இது வேலை செய்கிறது.

கடைசியாக, ’ஹிந்து’வின் தலைப்புச் சின்னத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். சில வருஷங்களுக்கு முன் வரையில், ஹிந்துவின் தலைப்புச் சின்னம், சர்க்கார் கெஜட்டுகளில் இருக்குமே, அந்த மாதிரி இரண்டு யாளிகளோடு கூடிய உருவமாயிருந்தது. 1903-ஆம் ஆண்டு ராஜ வாழ்த்துடன் வெள்ளிவிழா முடிவடைந்த ’ஹிந்து’வுக்கு அந்தச் சின்னம் பொருத்தமாயிருந்திருக்கலாம். இன்று தீவிர தேசீய வளர்ச்சி பெற்றுள்ள ‘ஹிந்து’வுக்கும் அந்தச் சின்னம் பொருத்தமாயிருக்குமா? அது கொஞ்ச காலத்துக்குமுன் மாற்றப்பட்டது.

நாளைக் காலை ‘ஹிந்து’வில் அந்தச் சின்னத்தை உற்றுக் கவனியுங்கள். அதில் காணப்படும் உருவங்களுக்கு இதுதான் பொருள்: [1] சூரியன் –ஞானத்தையும் ஜீவ சக்தியையும் குறிக்கும்; [2] இந்தியா-தாய்நாடு; [3] சங்கு-இந்திய ஜனங்களின் குரல்; செய்திப் பரப்பு; [4] தாமரை-தூய்மை; [5] காமதேனு-மங்களம்.

நன்றி: “சக்தி”

பின் குறிப்பு: “சக்தி” இதழின் நிறுவனர் வை.கோவிந்தன் இப்போது டாட் காமின் நிறுவனர் பீர் முகமதுவுக்கு ஆதர்சம்.

ஜூலை 8, 2017இல் வெளியான செய்திக் கட்டுரை மீட்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here