மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அரசு நிர்வாகத்தில் அனைத்துத் துறைகளிலுமாக பாஜக தோல்வியடைந்துவிட்டது. எனவே, தேர்தல் நேரத்தில் பாகிஸ்தானுடன் ஒரு சண்டையை ஏற்படுத்தியதோடு, பிரதமர் மோடியைத் தவிர எவராலும் இந்தியாவை காப்பாற்ற இயலாது என்ற ஒரு பிம்பத்தை அக்கட்சி உருவாக்குகிறது.

 ஆனால் மோடியிடம் ஒன்று கூற விரும்புகிறேன். நானோ, அவரோ எவர் உயிரோடு இருந்தாலும், இல்லாமல் போனாலும், இந்திய நாடு நிலைத்திருக்கும்.

 
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படையின் மூலம் தாக்குதல் நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டதன் ஒரே நோக்கம், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

அந்த நடவடிக்கையில் கோடிகளில் மதிப்புடைய ஒரு போர் விமானத்தை இழந்துள்ளோம். எனினும், நிம்மதிக்குரிய வகையில் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தானிடம் இருந்து மீட்டுள்ளோம். காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை ஒன்றே வழிமுறையாகும் என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here