காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இதில் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் வருமானத்தை மறு ஆய்வு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

2011, 2012-ம் ஆண்டுகளில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கண்டறியப்பட்டிப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி ரூ.300 கோடி வரையிலான வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறு ஆய்வு செய்யும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சோனியா, ராகுல்காந்தி தரப்பில் அப்பீல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சோனியா, ராகுல் தரப்பில் முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த வக்கீலுமான ப. சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, மறு ஆய்வு தவறான முறையில் செய்யப்பட்டுள்ளது. பல வி‌ஷயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் ஆய்வு செய்து ரூ.146 கோடி வரை வருமானம் இருந்ததாக முடிவுக்கு வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் லாபநோக்கத்தோடு நடத்தப்பட்டது அல்ல. அது ஒரு அறக்கட்டளை அமைப்பு. அதிலிருந்து வட்டியோ, வருமான பங்குகளோ வழங்குவது இல்லை. மேலும் அந்த நிறுவனம் ரூ.90 கோடி கடனில் உள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரூ.407 கோடி சொத்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இது சம்பந்தமாக ஜனவரி 29-ந்தேதிக்குள் சோனியா, ராகுல்காந்தியும் வருமான வரித்துறையும் விளக்கம் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here