காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலிருந்தும் வசூலிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மாதந்தோறும் ரூ. 10 கோடியை அபராதமாக தில்லி அரசு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

காற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி தலைமைச் செயலர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் தெளிவில்லாமல்; வெறும் கண்துடைப்பாக உள்ளது. சட்டவிரோதமாக இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் தில்லி அரசு எடுக்கவில்லை.

அத்துடன், காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்காததற்காக தில்லி அரசுக்கு ரூ. 25 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், காற்று மாசைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலிருந்தும் தில்லி அரசு வசூலிக்க வேண்டும்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மாதந்தோறும் அபராதமாக ரூ. 10 கோடியை தில்லி அரசு செலுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும், சட்டவிரோதமாக இயங்கி வரும் தொழிற்சாலைகளை மூடக் கோரியும், பவானா மற்றும் நரேலா பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் பிளாஸ்டிக், ரப்பர் எரிக்கப்படுவதைத் தடை செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் இணைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறுது. கடந்த விசாரணையின் போது, தலைநகர் தில்லியில் காற்று மாசுவை அதிகம் ஏற்படுத்தும் பகுதிகளில் உள்ள 51 ஆயிரம் தொழிற்சாலைகளை மூட பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்