136 பாலியல் வல்லுறவு குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்

0
129
ஈணாஆஆ

159 பாலியல் குற்றங்கள் மற்றும் 136 பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்காக பிரிட்டனில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. “அவரை விடுவிப்பது என்றும் பாதுகாப்பாக இருக்காது” என்று இவருக்கு தீர்ப்பு எழுதிய நீதிபதி கூறியிருக்கிறார்.

ரேயின்ஹார்டு சினாகா – மான்செஸ்டர் கிளப்களுக்கு வெளியில் இருந்து 48 ஆண்களை வசீகரித்து அழைத்துச் சென்று, போதை மருந்து கொடுத்து, தாக்கியதோடு, தாக்கியதை படம் பிடித்து வைத்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

36 வயதான சினாகா, குறைந்தது 190 பேருக்கு குறி வைத்திருந்தார் என்பதற்கு காவல் துறையினரிடம் ஆதாரங்கள் உள்ளன.

சினாகா “பிரிட்டனின் சட்ட வரலாற்று காலத்தில் மிக மோசமான கற்பழிப்புக் குற்றவாளியாக உள்ளார்” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

சினாகாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையில், குறைந்தது 30 ஆண்டு கால சிறைத் தண்டனையும் அடங்கும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ரேயின்ஹார்டு சினாகா

ரேயின்ஹார்டு சினாகா குறைந்தபட்சம் 190 பேரை தன் விருப்பத்துக்கு இரையாக்கியுள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் பலரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், என்ன நடந்தது என்று அவர்களுக்கு நினைவில்லை என்றும் கூறியுள்ளனர்.

முதுநிலை பட்டம் படித்து வந்த சினாகா, ஏற்கனவே இரண்டு வழக்குகளில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைவாசம் அடங்கிய ஆயுள் சிறைக் கைதியாக இருந்து வருகிறார். 2018ஆம் ஆண்டு அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தோனேசியாவை சேர்ந்த அவர் மீது நான்கு வெவ்வேறு விசாரணைகள் நடைபெற்றன. 136 பாலியல் வல்லுறவுகள், எட்டு பாலியல் வல்லுறவு முயற்சிகள், 14 பாலியல் தாக்குதல்கள், 48 பேரிடம் பாலியல் வன்புணர்வு செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட இன்னும் 70 பேரை தங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று புலனாய்வுத் துறையினர் கூறியுள்ளனர். சினாகாவால் துன்புறுத்தப்பட்டதாகக் கருதுபவர்கள் யாரும் தங்களை அணுகலாம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

“இளம் ஆண்களை குறிவைத்து தொடர்ச்சியாக காம வேட்டையில் ஈடுபட்டு வந்த காமப் பிசாசு” என்று சினாகா பற்றி நீதிபதி கூறியுள்ளார்.

“என் தீர்ப்பின்படி இவர் மிகவும் அபாயகரமான, குரூர குணம் கொண்ட, ஏமாற்றுக்காரராக இருக்கிறார், இவரை வெளியில் விட்டிருப்பது ஒருபோதும் பாதுகாப்பானதாக இருக்காது” என்று அந்தப் பெண் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். கைதிகளை விடுவிப்பது குறித்து பரோல் போர்டு தான் முடிவு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேர கிளப்கள் மற்றும் பார்களுக்கு வெளியே காத்திருக்கும் சினாகா, அங்கிருந்து வரும் ஆண்களிடம் கவர்ச்சியாகப் பேசி, பிரின்சஸ் தெருவில், மோன்டனா ஹவுஸில் உள்ள தனது அடுக்கு மாடி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மது குடிக்கலாம் என்று கூறியோ, டாக்ஸி பிடிக்கலாம் என்று கூறியோ அப்படி அழைத்துச் செல்வார்.

அவர்களுக்கு போதை மருந்து கொடுத்து, சுயநினைவு இழந்ததும் தனது விருப்பத்துக்கு இரையாக்கிவிடுவார். மயக்கம் தெளிந்து எழுந்ததும், பலருக்கு என்ன நடந்தது என்ற நினைவே இருக்காது.

சினாகா போதை மருந்து கலந்த மது கொடுத்து ஆண்களை போதைக்கு ஆளாக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.
சினாகா போதை மருந்து கலந்த மது கொடுத்து ஆண்களை போதைக்கு ஆளாக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாணவர் சினாகா, ஒப்புதலுடன்தான் பாலியல் உறவு நிகழ்ந்தது என்றும், தூங்குவது போல நடித்து அதை படமாக்கிக் கொள்ள ஒவ்வொரு ஆணும் ஒப்புக் கொண்டார் என்றும் கூறியுள்ளார். இது “கேலியான விளக்கமாக உள்ளது” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜி.எச்.பி. போன்ற போதை மருந்தை சினாகா பயன்படுத்தியிருப்பது நிச்சயமாகத் தெரிகிறது என்று, முந்தைய தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.

அந்த போதை மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது தமக்கு “மிகுந்த கவலை அளிக்கிறது” என்று உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல் கூறியுள்ளார்.

சினாகாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், “எனது வாழ்வின் ஒரு பகுதியை அழித்துவிட்டார்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். “அவர் ஒருபோதும் சிறையில் இருந்து வெளியே வர மாட்டார் என்று நம்புகிறேன், நரகத்தில் கிடந்து சாகட்டும்”‘ என்று இன்னொருவர் கூறியுள்ளார்.

தாங்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டோம் என்பதே, காவல் துறையினர் வந்து விசாரிக்கும் வரை தங்களுக்குத் தெரியாது என பலரும் கூறியுள்ளனர்.

லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்து வந்த சினாகா, பல ஆண்டுகளாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

2012ஆம் ஆண்டில் சினாகா அத்துமீறலில் ஈடுபட்டிருக்கும் போது, சுயநினைவுக்கு வந்த ஒருவர், சினாகாவுடன் சண்டையிட்டு, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தபோதுதான் இதுபற்றி வெளியில் தெரிய வந்தது.

சினாகாவின் செல்போனை காவல் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். தனது செயலுக்கு இரையான ஒவ்வொருவரையும் அவர் செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும், அவை பல நூறு மணி நேரம் ஓடக் கூடியவையாக இருந்தன என்பதும் கண்டறியப்பட்டது.

பிரிட்டன் வரலாற்றில் மிகப் பெரிய பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணையாக அது தொடங்கியது.

சினாகாவின் குற்றச் செயல்களின் உண்மையான பாதிப்பை ஒருபோதும் கண்டறிய முடியாது என்று காவல் துறை உயரதிகாரி மாப்ஸ் ஹுசேன் கூறினார்.

சினாகா புறப்படும் காட்சியின் சிசிடிவி பதிவுகள் நீதிபதிகளுக்குக் காட்டப்பட்டது.
சினாகா புறப்படும் காட்சியின் சிசிடிவி பதிவுகள் நீதிபதிகளுக்குக் காட்டப்பட்டது.

“அவர் சுமார் 10 ஆண்டு காலம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். சம்பவ இடத்தில் இருந்து, சேகரிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்குரிய பொருட்களை வைத்து நாங்கள் தகவல்கள் சேகரிக்கிறோம்” என்று அவர் கூறினார்.

சினாகாவின் மான்செஸ்டர் வீட்டில் கிடைத்த திருடப்பட்ட செல்போன்கள், அடையாள அட்டைகள், கைக் கடிகாரங்கள் போன்ற பொருட்களை வைத்து, விடியோக்கள் மூலமாக பலரை தாங்கள் அடையாளம் கண்டுபிடித்ததாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தில் சிலர் இந்த வழக்கால் “நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று சினாகா படித்த மான்செஸ்டர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆறுதல் பெற விரும்புவோருக்காக, பிரத்யேகமான ரகசிய தொலைபேசி தொடர்பு வசதியை உருவாக்கி இருப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தச் செய்தி “மிகவும் துயரமானது” என்று பல்கலைக்கழகத்தின் பெண் துணைவேந்தரான டேமே நான்சி ரோத்வெல் கூறியுள்ளார்.

`பிரமிப்பூட்டும் புள்ளி விவரம்’

சினாகாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவரை கொடூரமான பிசாசு என்று கூறியிருப்பது `சரியான வார்த்தைகள்’ என்று நீதிபதி கட்டார்ட் கூறியுள்ளார். அந்த அளவுக்கு அவருடைய நடவடிக்கை “கொடூரமானதாக இருந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினாகா `சிறிதளவும் இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டார்’ என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். சில நேரங்களில் “வழக்கு விசாரணையை சினாகா ரசித்தது போல தெரிந்தது” என்றும் கூறியுள்ளார்.

“பிரிட்டனின் சட்ட வரலாற்றில், அநேகமாக உலக வரலாற்றில் மிக மோசமான பாலியல் வல்லுறவுக் குற்றவாளியாக” சினாகா உள்ளார் என்று, தீர்ப்புக்குப் பிறகு அரசு வழக்கறிஞர் இயான் ரஷ்ட்டன் கூறினார்.

“இருபால் உறவில் நாட்டம் உள்ள ஆண்களை குறி வைப்பதில் சினாகாவுக்கு மகிழ்ச்சி இருந்துள்ளது” என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்காக வருத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையில் வெறுப்பை ஏற்படுத்தும் இந்தக் குற்றங்கள்” பற்றி கருத்து தெரிவித்துள்ள உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல், ஜி.எச்.பி. போன்ற போதை மருந்துகள் மீதான கட்டுப்பாடு “போதிய அளவுக்கு மிகவும் கடுமையாக உள்ளனவா” என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு தன்னிச்சையான குழு ஒன்றை கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஜி.எச்.பி. என்பது சி பிரிவில் உள்ள போதை மருந்து. அந்த மருந்து வைத்திருப்பதாக கைது செய்யப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

சினாகாவுக்கு எதிராக மான்செஸ்டர் நீதிமன்றத்தில் 18 மாதங்கள் விசாரணை நடந்தது. அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.

2015 ஜனவரி முதல் 2017 ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சினாகா செய்த குற்றச் செயல்களுக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பிருந்தே அவர் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பார் என்று காவல் துறை நம்புகிறது.

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here