சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ள www.tnresults.nic.in, www.dge1tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவகளை அறிந்து கொள்ளலாம்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 27ம் தேதி நடைபெறும்.வரும் 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் (97.27%), ராமநாதபுரம் (97.02%) உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,12,620 பேர் எழுதி உள்ளனர் . அதில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒட்டு மொத்தமாக 10ம் வகுப்பில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும் 3ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.8% பேரும் மாணவிகள் 94.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடங்கும்.10ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.10ம் வகுப்புத் தேர்வில் 85.25% அரசுப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்,’என்றார்.