11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை காவலாளிகள் உள்பட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தொடர்புடையை 17 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அயனாவத்தில் 350 வீடுகள் கொண்ட பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

செவி திறன் குறைபாடு உள்ள அந்த சிறுமியை அந்த குடியிருப்பின் ‘லிஃப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் உட்பட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அச்சிறுமியின் பெற்றோர் அயனாவரம் போலீஸில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சுரேஷ் (32), அபிஷேக் (23), இரால் பிரகாஷ்(40), சுகுமாரன்(60), ரவிக்குமார்(64), ராஜசேகர் (40) உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது போக்ஸோ, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் அனைவரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சிறுமி கூறிய தகவல்களை பதிவு செய்த நீதிபதி, குற்றவாளிகளை ஜூலை 31 ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த குற்றவாளிகளுக்கு யாரும் ஆஜராகக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம். மீறி ஆஜரானால் அவர்களை சங்கத்தில் இருந்து விலக்க முடிவு செய்வோம். இதுபோன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த குற்றவாளிகளுக்கு யாரேனும் ஆதரவாக வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம். அச்சிறுமிக்காக சட்ட ரீதியாக போராடுவோம். இலவச சட்ட ஆணையத்தின் மூலமும் யாரும் ஆஜராகக் கூடாது என்று கேட்டு கொள்கிறோம் என்றார்.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்