தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும்  புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிக் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ மழையும், காமாட்சிபுரத்தில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், நிலக்கோட்டையில் 10 செ.மீ, பாடாலூர், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், திருச்சுழி, தாளவாடி, கொள்ளிடம் பகுதிகளில் தலா 7 செ.மீ, விழுப்புரத்தில் 6 செ.மீ, மானாமதுரை, அரவக்குறிச்சி, திருச்சி விமான நிலையம், வேடசந்தூர், மூலநூர், சாத்தூர் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* செப்டம்பர் 2ம்(இன்று) தேதி,  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில், கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 2 முதல் 6ம் தேதி வரை, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 03.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 2.9 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here