இந்திய கேப்டன் விராட் கோலி (30) தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்து உணர்வுபூர்வமான பதிவொன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக சர்வதேசப் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமானார். இதையடுத்து 2019, ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் 11 வருடங்களைக் கடந்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே தன் திறமையை வெளிக்காட்டிய விராட் கோலி, பல்வேறு சாதனைகளை முறியடித்தார். பல புதிய சாதனைகளைப் புரிந்து வருகிறார். தொடர்ந்து இந்திய அணியின் ‘ரன் மெஷினாக’ செயல்பட்டு வருகிறார். 

”இதே நாளில் 2008-ஆம் ஆண்டு டீன் ஏஜில் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 2019-ஆம் ஆண்டுன் 11 வருடங்களை கடந்துவிட்டேன். கடவுளிடம் இருந்து இத்தனை பெரிய ஆசிர்வாதம் கிடைக்கும் என கனவு கூட கண்டதில்லை. நீங்கள் அனைவரும் சரியான பாதையில் சென்று பெரும் வெற்றி பெற அனைத்து சக்திகளும் கிடைக்க எனது வாழ்த்துகள்” என்று விராட் கோலி பதிவிட்டுள்ளார்.  

தனது முதல் போட்டியில் வெறும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார் கோலி. அதன்பின்னர், 2009 தனது முதல் சதத்தைப் அடித்தார். ஆனால், தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். 

டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கோலி, பல சாதனைகளை படைத்து வருகிறார். அவ்வகையில், 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற தனித்துவம் மிக்க சாதனையை சமீபத்தில் படைத்தார். 

டெஸ்ட் போட்டிகளில்2011-ஆம் ஆண்டும், டி20-யில் 2010-ஆம் ஆண்டிலும் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 239 ஒருநாள் போட்டிகளில் 11,520 ரன்களும், 77டெஸ்ட் போட்டிகளில் 6,613 ரன்களும், 70டி20-யில் 2,369 ரன்களும் குவித்துள்ளார்.