தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன.

2018-19 கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விற்பனை ஜூன் 18 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில், 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் விற்பனை திங்கள்கிழமை டிபிஐ வளாகத்தில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து புத்தகங்களை வாங்குவதற்காக சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் உள்ள சிறப்பு விற்பனை கவுன்ட்டரிலும் பெற்றோர்கள் வந்தனர் .

1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மே மாதத்தில் இருந்தே விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையே 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்திருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 11-ஆம் வகுப்பு கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் விலை உயர்ந்து இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன அதிகாரி கூறுகையில், பாடப்புத்தகங்கள் மிக தரமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாடப்புத்தகங்களிலும் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள், படங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

திருத்தப்பட்ட பாடப் புத்தகங்களின் வடிவமைப்புகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும் போது, புதிய பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் வண்ணமயமாகவும், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் உள்ளன என்றார்.

பாடநூல் கழக விற்பனை மையங்கள், மண்டல அலுவலக கிடங்குகள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். மேலும், பாட நூல் கழகத்தின் இணைய தளத்தை www.textbookcorp.in பயன்படுத்தி மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் ஆன்லைனில் பதிவுசெய்து புத்தகங்களை விரைவு தபால் அல்லது கூரியர் சேவை மூலமாக பெறலாம். புக்கிங் செய்த 2 நாட்களுக்குள் புத்தகங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

https://www.textbookcorp.in/files/PRICELIST.pdf

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here