அநாகரிக போக்கைக் கையாளும் ஹெச்.ராஜா போன்றவர்களைக் கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது வழக்கமான அநாகரிக போக்கை கையாண்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கவிஞர் வைரமுத்தை கண்டிக்கிற போக்கில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய இறைத்தூதர் முகமது நபி (ஸல்) பற்றியும் தேவையில்லாமல் பேசி, அந்த விவகாரத்தை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எப்போதும் அநாகரிகமான போக்கைக் கையாளும் எச்.ராஜா, சமயம் கிடைக்கும் போதேல்லாம் முஸ்லிம் சமூகத்தைச் சீண்டுவதும், தலைவர்களை ச்சீண்டுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களையும் அவர் இழிவாக, நாகரிகமற்ற முறையில் பேசி வருகின்றார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவர் மீது பல்வேறு வழக்குகள், புகார்கள் இருந்தும் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன?

கவிஞர் வைரமுத்து அவர்கள் பிற மதத்தில் இருந்துகொண்டு அவர் ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதவில்லை. அவருடைய மதமான இந்து மதத்தில் இருந்துகொண்டுதான், அவர் மேற்கோளாக ஒரு ஆய்வாளரின் சில கருத்துக்களை முன்வைக்கின்றார். அந்த கருத்து சர்ச்சைக்குரியது எனில் அதற்கு பதிலளிக்க வேண்டுமே தவிர, தேவையில்லாமல் வகுப்புவாத அரசியலுக்காக முஸ்லிம்களையும், சிறுபான்மை சமூகத்தினரையும், மற்ற தலைவர்களையும் நாக்கில் நரம்பின்றி, நாகரிகமற்ற முறையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக காவல்துறை இதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இனியும் எச்.ராஜா போன்றவர்கள் நாவடக்கமின்றி போகிறபோக்கில் சிறுபான்மை மக்களை சீண்டும் நடவடிக்கையை தொடருவாரானால், கடுமையான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இதுபோன்ற அநாகரிகமற்றவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதுபோன்ற அநாகரிக போக்கை கையாளும் எச்.ராஜா போன்றவர்களை கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்