(மார்ச் 21, 2019இல் வெளியான கட்டுரை மறுபிரசுரமாகிறது)

”நானும் இப்ப பசங்க கூட்டத்துல சேர்ந்துட்டேன்” என்று உற்சாகமாக சொல்கிறார் ரேஷ்மா; பெண்ணாக இருப்பதை மறுதலிப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ, வெறுப்பதற்கோ ரேஷ்மா இப்படிச் சொல்லவில்லை. அடிமைப்படுத்த அல்லது நிராகரிக்க நினைத்த ஆண்களை நோக்கி பலமான கைகளை உயர்த்தி இப்படிச் சொல்கிறார். இப்படிச் சொல்வதற்கு 2011லிருந்து 2018 வரை ஏழு வருடங்களாக போராடவும் காத்திருக்கவும் வேண்டியிருந்தது. உலகெங்கும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் கப்பல் துறையில் பிரவேசித்து சம பலம் கொண்டவள் நான், சரிநிகர் சமானம் நான் என்று சொல்லியடிப்பது சாதாரணமான சாதனையல்ல; அசர வைக்கும் சாதனை. இந்தியாவின் ஒரே பெண் கப்பலோட்டியான ரேஷ்மா ஒரு தமிழச்சி. சென்னையில் வளர்ந்து படித்தவள். இந்தத் தேசத்தின் முதலாவதும் ஒரே ஒருத்தியுமான கப்பலோட்டி எப்படி அந்த இடத்துக்குப் போனாள்? ”நான் குழந்தையாக இருந்தபோது டாக்டராக வேண்டுமென்றுதான் நினைத்தேன்; ஆனால் 8ஆம் வகுப்பிலிருந்தே புதிதாக எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார் ரேஷ்மா நிலோஃபர் நாகா. திறந்த மனதோடு இருந்தேன் என்பதுதான் முன்னணியிலிருக்கும் வாய்ப்பைத் தனக்கு அளித்தது என்று நம்புகிறார். எழுத்தாளரான தாய் அமரந்தாவால் கிடைத்த சுதந்திர சூழலும் ரேஷ்மாவை வார்த்திருக்கிறது.

பிளஸ் 2வில் 94 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருந்தார் ரேஷ்மா. அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இது போதாது. தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து நடுத்தரக் குடும்பத்து பெற்றோரைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. என்ஜினீயரிங் படித்து கூட்டத்தில் கரைந்து காணாமல் போக ரேஷ்மா விரும்பவில்லை. அப்போதுதான் உலகிலேயே மிகப்பெரிய சரக்குப் பெட்டக கப்பல் நிறுவனமான ஏபி மாலர் மெர்ஸ்க், ஐந்தாண்டு கால பி.இ (மெரைன் டெக்னாலஜி) படிப்பிற்கு முழுப் பொறுப்பேற்பதாக விளம்பரம் கொடுத்திருந்தது. ராஞ்சியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வழங்கும் பட்டம் அது. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள அமெட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொள்ளலாம். 2006இல் இங்கு சேர்ந்த ரேஷ்மா 2011இல் பட்டத்துடன் வெளியே வந்தார். 2010, 2011 ஆண்டுகளில் படிப்பின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் சரக்குப் பெட்டகக் கப்பல்களில் வலம் வந்தார். ”அந்த இரண்டு வருடங்களில் ஆஸ்திரேலியாவைத் தவிர உலகம் முழுவதும் சுற்றிவிட்டேன்” என்கிறார் ரேஷ்மா.

2011இல் கொல்கத்தா துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பயிற்சிக் கப்பலோட்டியாக சேர்ந்தார். “எங்குமே நீங்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டீர்கள். பெண்ணாக இருந்தால், நீங்கள் செய்யும் வேலையில் இரட்டிப்புத் திறமை இருந்தால்தான் சமமாக பாவிக்கப்படுவீர்கள்” என்று சொல்லுகிறார் ரேஷ்மா. 2018 ஜனவரியிலிருந்து முழு கப்பலோட்டியாக ஏற்கப்பட்டுள்ளார் ரேஷ்மா. வங்காள விரிகுடாவில் சாகர் தீவுக்கு அருகில் நுழையும் கப்பல்கள் 148 கிலோமீட்டர் தூரத்துக்கு சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் ஹூக்ளி நதியில் பயணித்து கொல்கத்தா அல்லது ஹால்டியா துறைமுகத்தில் நங்கூரமிடும். ஹூக்ளி நதியில் கப்பலை ஓட்டிச் செல்வது சவாலான வேலை. பாம்பு போல வளைந்து செல்லும் நதி இது. மணிக்கு 14-15 கிலோமீட்டரில் அலைபுரளும் நதி இது. சில இடங்களில் 8 மீட்டர் மட்டுமே ஆழம் கொண்ட நதி. இந்த நதியில் கப்பலோட்டுவதே பெரிய கலை. அதைத்தான் ரேஷ்மா தினமும் செய்து வருகிறார். இந்தச் செயலைப் பாராட்டித்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரேஷ்மாவுக்கு இந்த மகளிர் தினத்தில் (மார்ச் 8, 2019) நாரி சக்தி புரஸ்கார் விருது என்னும் கவுரவத்தை அளித்திருக்கிறார்.

(மார்ச் 27, 2019 அன்று இந்தச் செய்திக் கட்டுரை சிறிய அளவில் மேம்படுத்தப்பட்டது.)

Exclusive: The Raya Sarkar Interview

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here