’ஹிந்து விரோதி’ கௌரி லங்கேஷை கொலை செய்ய ரூ.13,000 கொடுத்தனர்: பரஷுராம் வக்மாரே

0
556

கௌரி லங்கேஷின் கருத்துகள் ஹிந்து விரோதமாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய சம்மதித்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் பரஷுராம் வக்மாரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

“நான் பணத்துக்காக இதை செய்யவில்லை. அவரது கருத்துகள் ஹிந்து விரோதமாக இருந்ததால் மட்டுமே கொலை செய்ய ஒப்புக்கொண்டேன்” என கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷை துப்பாக்கியால்
சுட்டதாக கருதப்படும் பரஷுராம் வக்மாரே புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார்.

29 வயதான பரஷுராம் தனக்கு ரூ. 13,000 கொடுக்கப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிந்தகி பகுதியில் ஒருவரை சந்தித்ததாகவும், கௌரி லங்கேஷை கொலை செய்தால் தனக்கு அனைத்து வழியிலும் ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் பரஷுராம். மாநகரில் உணவு மற்றும் தங்கும் வசதிக்கு முன்பணமாக ரூ. 3,000 கொடுக்கப்பட்டதாகவும் கொலை செய்த பிறகு அடையாளம் தெரியாத நபர்
ஒருவர் தம்மிடம் ரூ. 10,000 கொடுத்ததாகவும் அதன் பிறகு தான் நகரை விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

“கௌரியை கொன்ற பிறகு நான் என் சொந்த ஊருக்கு திரும்பினேன். அதன்பிறகு யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை,” என புலனாய்வு அதிகாரிகளிடம் பரஷுராம் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு பிறகு தான் வேலை செய்த பாத்திரக்கடைக்கு பரஷுராம் செல்லவில்லை.
“கொலையை பற்றி அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாருடனும் ஆலோசிக்கவில்லை. தன் குடும்பத்தினரிடம் எப்போதும் போல் இயல்பாக இருந்ததால் அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்தபோதும் கூட அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கவில்லை” என்று புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கிறது .

”கொலைக்குப் பிறகு விஜயபுரத்தில் பரஷுராம் ஒரு ஹிந்து பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். விசாரணையின் போது அது பற்றி அவர் ஏதும் கூறவில்லை. சிந்தகியில் அவர் சந்தித்த நபர் யார் என்று அறிய தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெறும்” என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது .

Courtesy :Deccan Chronicle

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here