வசூலை வைத்து சூப்பர் ஸ்டாரை தீர்மானித்தால், இன்று உலக அளவில் சூப்பர் ஸ்டாராக கருதப்பட வேண்டியவர் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். அவரது மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் ஆறாவது பாகமான மிஷன் இம்பாஸிபிள் – ஃபால்அவுட் அதனை உறுதி செய்திருக்கிறது.

மிஷன் இம்பாஸிபிள் சீரிஸும், அதில் டாம் க்ரூஸ் ஏற்று நடிக்கும் ஈதன் ஹண்ட் கதாபாத்திரமும் உலக அளவில் பிரபலம். கதை? ஜேம்ஸ் பாண்ட் போன்று உலகத்தை காப்பாது. ஜேம்ஸ் பாண்டின் அடையாளம் அதிநவீன கார்கள், அழகழகான பெண்கள் என்றால் ஈதன் ஹண்டின் அடையாளம் யாரும் நுழைய முடியாத அதிபாதுகாப்பு வாய்ந்த இடத்தில் நுழைவது. இந்தக் காட்சியை அனேகமாக எல்லா மிஷன் இம்பாஸிபிள் படங்களிலும் பார்க்கலாம். ஆகாயம், பூமி, தண்ணீர் என அனைத்து இடங்களிலும் சேஸிங் நடக்கும். வில்லன், நாயகன் இருவருமே ஒருவரையொருவர் ஏமாற்ற மற்றவர்களைப் போல் முகமூடி அணிந்துவரும் காட்சியும் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் ஹைலைட்டாக இருக்கும். இந்தக் காட்சிகள் ஜான் வூ இயக்கிய மிஷன் இம்பாஸிபிள் 2 படத்தில் கொஞ்சம் அதிகமாகவே வரும்.

மிஷன் இம்பாஸிபிள் சீஸின் ஆறாவது பாகமான ஃபால்அவுட் இரண்டு வாரங்கள் முன்பு வெளியானது. முதல் வார இறுதியில் 61 மில்லியன் டாலர்களுடன் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை கூறுவது அவசியம்.

இந்தியாவில் நடிகர்களை வைத்தே படவியாபாரம் நடக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களே அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலை ஆக்கிரமிக்கின்றன. அமெரிக்காவில் அப்படியல்ல. அவதார், ஸ்டார் வார்ஸ், டைட்டானிக், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், அவெஞ்சர்ஸ், அயன்மேன், பேட்மேன், ஸுட்டோபியா, கோகோ என எந்தப் படமும் நடிகருக்காக ஓடியதில்லை. காமிக்சாக புகழ்பெற்ற கதாபாத்திரங்கள், அனிமேஷன் படங்கள், அவதார், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற அதிபுனைவுகள் என அனைத்துமே நடிகர்கள் என்ற வட்டத்தை தாண்டியவை. நடிகருக்காக படம் ஓடுவது அரிது. அதிக கலக்ஷனை பெறுவது அதைவிட அரிது.

நடிகர்களில் யாருக்கு அதிக வரவேற்பு என்றால் அது டாம் க்ரூஸுக்கு மட்டுமே. இந்த கோணத்தில் பார்த்தால் 61 மில்லியன் டாலர்கள் என்பது அபாரான ஓபனிங். சுமார் 178 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட படம் மிஷன் இம்பாஸிபிள் – ஃபால்அவுட். ஹாலிவுட்டில் எந்த நடிகரை நம்பியும் இவ்வளவு பெரும் தொகையை யாரும் முதலீடு செய்வதில்லை. டாம் க்ரூஸ் விதிவிலக்கு.

மிஷன் இம்பாஸிபிள் – ஃபால்அவுட் ஏழாம் தேதிவரை யுஎஸ்ஸில் 135 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. பிற நாடுகளில் 224.76 மில்லியன் டாலர்கள். இதில் யுகே மற்றும் தென்கொரியாவுக்கு அடுத்தபடி அதிக வசூலை இந்தியாவிலிருந்து எடுத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31 சீனாவில் படம் வெளியாகிறது. எப்படியும் 100 மில்லியன் டாலர்களை கடந்து அங்கு படம் வசூலிக்கும்.

டாம் க்ரூஸின் படங்கள் பிற ஆக்ஷன்பட நடிகர்களின் படங்களைவிட அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. அதிலும் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸுக்கு ரசிகர்கள் அதிகம். இந்தமுறை ஆக்ஷன்படம் இயக்குவதில் கில்லாடியான கிறிஸ்டோபர் மெக்காரி படத்தை இயக்கியிருக்கிறார். இவர்தான் மிஷன் இம்பாஸிபிளின் முந்தைய பாகத்தை இயக்கியவர். அத்துடன் டாம் க்ரூஸின் இன்னொரு வெற்றிகரமான சீரிசான ஜாக்ரீச்சரின் முதல் பாகத்தை இயக்கியவர்.

ஃபால்அவுட் படத்தின் வசூல் மற்றும் அதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் என்பதை உறுதி செய்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்