சில இயக்குநர்கள் குறிப்பிட்ட சில நடிகர்களுடன் தொடர்ந்து பணிபுரிவார்கள். அவர்கள் இணையும் போது வழக்கத்தைவிட சிறப்பான படங்கள் கிடைக்கும். ஹாலிவுட் மேதைகளில் ஒருவரான மார்டின் ஸ்கார்சஸே ஐந்துமுறை லியோனார்டோ டிகாப்ரியோவை இயக்கியிருக்கிறார். ஆறாவது முறையாக இவர்கள் இணைகிறார்கள்.

மார்டின் ஸ்கார்சஸே ஒருகாலத்தில் ராபர்ட் டி நீரோ நடிப்பில் அதிக படங்கள் இயக்கினார். டாக்சி டிரைவர், ரேகிங்புல், குட்பெலாஸ் போன்ற ஸ்கார்சஸேயின் மைல்ஸ்டோன் படங்கள் ராபர்ட் டி நீரோ நடிப்பில் உருவானது. அதன் பிறகு டிகாப்ரியோவை அதிகம் பயன்படுத்த தொடங்கினார். ஸ்கார்சஸி இயக்கத்தில் டிகாப்ரியோ நடித்த தி ஏவியேட்டர், கேங்ஸ் ஆஃப் நியூயார்க், தி டிபார்டட், ஷட்டர் ஐலெண்ட், தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் என ஐந்து படங்களும் ஹாலிவுட் சினிமாவின் முக்கியமான படங்களாக கருதப்படுகின்றன. ஆறாவதாக இவர்கள் இணையும் படம், Killers of the Flower Moon. டேவிட் கிரான் (David Grann) இதே பெயரில் எழுதிய நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. நாவல், நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லரில் இடம்பெற்ற புத்தகம்.

இந்த நாவலை படமாக்குவதற்கான உரிமை 2016 இல் வாங்கப்பட்டது. அப்போதே ஸ்கார்சஸே, டிகாப்ரியோ இருவரும் படத்தில் பணிபுரிய ஒப்புக் கொண்டனர். ஃபாரஸ்ட் ஹம்ப், தி ஹார்ஸ் விஸ்பர், முனிச், தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் போன்ற முக்கியமான திரைப்படங்களின் திரைக்கதையை எழுதிய எரிக் ராத் இதன் திரைக்கதையை எழுதுகிறார். தற்போது உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘ஏ ஸ்டார் இஸ் பார்ன்’ படத்தின் திரைக்கதையும் இவரே.

ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களின் பேய் பயம் நமக்கு தெரிந்ததுதான். பேய்படங்களாக எடுத்து, தியேட்டரில் பேய் படம் பார்த்து பயந்து, ஹாலோவீன் என்று அதற்காகவே ஒரு விழா எடுத்து, பேயை வாழவைக்கும் வம்சத்தினர். சென்ற வாரம் ஹாலோவீன் என்ற படம் யுஎஸ்ஸில் வெளியானது. வெறும் 10 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரான படம், யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில் 76.2 மில்லியன் டாலர்களை வசூலித்து அசரடித்துள்ளது.

ஹாலிவுட்டில் ஸ்டார்களைவிட பேய்களே கோலோச்சுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here