ஹாலிவுட் டைம்ஸ் – கம்யூனிஸ தேசத்துக்குள் பாய்ந்த கருஞ்சிறுத்தையும் ஸ்டாலினின் மரணமும்

0
129

பிளாக் பேந்தர் படம் கன்னா பின்னாவென்று வசூலிக்கிறது. யுஎஸ்ஸில் முதல் 4 வாரங்களில் 562 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. சுமாராக 3700 கோடிகள். உள்ளூரில் இப்படியென்றால் வெளிநாடுகளில் முதல் 4 வாரங்களில் 516 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. அதாவது ஒரு பில்லின் டாலர்களை படம் கடந்துவிட்டது.

நாம் மேலே பார்த்த வெளிநாட்டு வசூலில் சீனா இல்லை. கடந்த வாரம்தான் சீனாவில் படம் வெளியானது. வெள்ளிக்கிழமை ஒரு லட்சத்து ஏழாயிரம் காட்சிகளில் 20.7 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது. சனிக்கிழமை ஒரு லட்சத்து பத்தாயிரம் காட்சிகளில் 27.1 மில்லியன் டாலர்கள். ஞாயிறு ஒரு லட்சத்து எட்டாயிரம் காட்சிகளில் 17.6 மில்லியன் டாலர்கள். இதுதவிர ப்ரிவியூ காட்சிகளில் 1.4 மில்லியன் டாலர்கள். மொத்தமாக முதல் மூன்று தினங்களில் சீனாவில் மட்டும் 66 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. படம் டாப் கியரில் எகிறவில்லை என்றாலும் சீனாவில் 300 மில்லியன் டாலர்களையாவது கைப்பற்றும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

கறுஞ்சிறுத்தை இப்படி கண்டமேனிக்கு பாய்ந்து பிடுங்குகையில் நகைச்சுவையான கேள்வி ஒன்றை படத்தை தயாரித்த மார்வல் ஸ்டுடியோவின் தலைமை அதிகாரி கெவினிடம் கேட்டனர். பிளாக் பேந்தரின் சீக்வெலை எடுப்பீர்களா? 100 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் டப்பா படத்துக்கும் சீக்வெல் எடுப்பவர்கள், 1000 மில்லியன் டாலர்களை கடந்திருக்கும் படத்துக்கு எடுக்காமலிருப்பார்களா? ‘கண்டிப்பாக, வேலையை தொடங்கிட்டோமில்லை’ என்றிருக்கிறார் கெவின்.

கம்யூனிஸ தேசத்துக்குள் கறுஞ்சிறுத்தை வேட்டையாடிக் கொண்டிருக்க, இந்தி படமொன்றும் ஓர் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கிறது. சல்மான்கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் படம் ஒரு வாரம் முன்பு சீனாவில் வெளியானது. பிகே, தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு இந்தப் படத்துக்கு இல்லை. எனினும் முதலுக்கு மோசமில்லை. முதல்வார இறுதியில் 8.44 மில்லியன் டாலர்களை படம் வசூலித்துள்ளது. சென்றவார இறுதியில் – அதாவது இரண்டாவது வார இறுதியில் வசூல் 5 சதவீதம் அளவே குறைந்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் 8 மில்லியன் டாலர்களை படம் வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் மொத்தமாக 26.1 மில்லியன் டாலர்கள். நமது ரூபாயில் சுமார் 170 கோடிகள்.

திரிபுராவில் கம்யூனிஸ ஆட்சி வீழ்ந்ததும் அங்கிருந்த லெனின் சிலைகள் பாஜகவினரால் அகற்றப்பட்டன. நாடு முழுவதும் இந்த செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எதிர்த்தவர்களுக்கு எரிச்சலையும், இடித்தவர்களுக்கு சிரிப்பையும் தரக்கூடிய ஒரு படம் வெளிவந்திருக்கிறது. தி டெத் ஆஃப் ஸ்டாலின். சந்தேகம் வேண்டாம். சோவியத் யூனியனை கட்டியெழுப்பிய மாபெரும் தலைவர் ஸ்டாலினேதான்.

தி டெத் ஆஃப் ஸ்டாலின் 2017 ல் எடுக்கப்பட்ட பிரிட்டன் பிரெஞ்ச் தயாரிப்பு. 1953 இல் ஸ்டாலின் மரணத்தையொட்டிய அரசியல் சட்டையர் (Political Satire ) இந்தப் படம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுத்திருக்கிறார் இயக்குனர் அமாண்டோ இன்னேச்சி. மார்ச் 9 ஆம் தேதி இப்படம் யுஎஸ்ஸில் வெளியானது.

படத்தை விமர்சகர்கள் ஆஹா ஓஹோ என்று கொண்டாட, படம் நிறைய வரலாற்று திரிபுகளுடன் எடுக்கப்பட்டிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கடிந்துள்ளனர். ரஷ்யா, கசகஸ்தான் உள்பட சில நாடுகளில் இந்தப் படம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் படத்தை வெளியிட இடதுசாரிகள் எதிர்ப்பும், பாஜக ஆதரவும் அளிப்பார்கள். ஆதரவு அளிப்பவர்களுக்கு தெரியாது, ஜார்ஜ் புஷ் பதவியில் இருந்த போது, அவர் கொல்லப்பட்டால் என்ன நிகழும் என்று யுஎஸ்ஸில் படம் எடுத்தார்கள். இங்கு தேசத்தந்தையை கொன்றவனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவார்கள். தேசத்துக்காக பேசுகிறவர்களை நக்சலைட் என்று சுட்டுக் கொல்வார்கள்.

ஸ்டாலின் இன்றும் ஐரோப்பாவின் மிரட்சியாக இருக்கிறார் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சான்று.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இதையும் படியுங்கள்: அருண்ஜேட்லியின் மகள் அலுவலகத்தில் சோதனை நடத்தாது ஏன்?’

இதையும் படியுங்கள்: விவசாயி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்