ஹாலிவுட் நிறுவனங்கள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளன. இந்தியாவில் ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ஹாலிவுட் படங்கள், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வெளியானது ஹாலிவுட் படங்களின் முதற்கட்ட முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்திய அளவில் சில கோடிகள் வசூலித்த படங்கள் 200 கோடிகளை கடந்து வசூலித்தன. இந்திய சந்தை இதைவிட பெரியது என்பது ஹாலிவுட்டுக்கு தெரியும். இந்தியாவின் கடைசி ரசிகர்கள்வரை தங்களது படத்தை எடுத்துச் செல்ல அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். இந்திய சினிமாத்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

ஹாலிவுட்டில் தயாராகும் படங்களில் 60 சதவீதம் யூனிவர்சல் ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப்படுபவை. குறிப்பாக சூப்பர் ஹீரோ, அனிமேஷன், ஆக்ஷன் மற்றும் ஹாரர் படங்கள். இவை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கலாச்சாரத்தையோ வாழ்வியலையோ முன்வைப்பவை அல்ல, பிரமாண்டத்தை முன்வைப்பவை. அதனால், உலகின் எந்த மூலையில் உள்ள சினிமா ரசிகரும் இந்தப் படங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும், ரசிக்க இயலும்.

ஹாலிவுட் படங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வெளியாக ஆரம்பித்தபின், ஆங்கிலப் படங்களின் வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டது. பல படங்கள் இருந்தாலும், 2015 இல் வெளியான தி பாஸ்ட் அண்ட்  தி ஃப்யூரியஸ் சீரிஸின் 7 வது பாகமான ஃப்யூரியஸ் 7 திரைப்படம் முக்கியமானது. ஜேம்ஸ் வான் இயக்கிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படம் வெளியானதும், நேரடி இந்தியப் படங்கள் அளவுக்கு ரசிகர்கள் படத்தை திரையரங்கில் சென்று கண்டுகளித்தனர். 

இந்திய நிலப்பரப்பை மையப்படுத்திய தி ஜங்கிள் புக் காமிக்ஸ் கதை திரைப்படமாக வந்தபோது திரையரங்குகள் திருவிழாவாக மாறின. படம் இந்தியாவில் 250 கோடிகளை கடந்து வசூலித்து, அதுவரை இருந்த வெளிநாட்டுப் படங்களின் இந்திய வசூலை முறியடித்தது. அதையடுத்து வெளியான அவெஞ்சர்ஸ் – இன்பினிட்டி வார் ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மேலும் நம்பிக்கை அளித்தது. 

இதன் அடுத்தப் பாகமான அவெஞ்சர்ஸ் – என்ட்கேம் வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது.அவெஞ்சர்ஸ் – இன்பினிட்டி வார் இந்தியாவில் நல்ல வசூலை பெற்றதால் என்ட்கேம் படத்தின் இந்திய விளம்பரத்துக்காக டாலரை இறைத்திருக்கிறார்கள். ரஹ்மான் இசையில் அவெஞ்சர்ஸ் ஆன்தம் உருவாக்கியது, பிராந்திய மொழியில் வெளியாகும் படத்தில் அந்தந்த பிராந்திய மொழி பிரபலங்களை பயன்படுத்தியது என்று முழுவீச்சில் இறங்கி அடித்திருக்கிறார்கள். தமிழில் வெளியாகும் அவெஞ்சர்ஸ் – என்ட்கேம் படத்துக்கு முருகதாஸ் வசனம் எழுதியிருக்கிறார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா போன்றவர்கள் டப்பிங் பேசியிருக்கிறார்கள். நேற்று தொடங்கிய படத்தின் முன்பதிவுக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்திருக்கிறது. சர்வர் க்ராக் ஆகும் நிலை ஏற்பட்டதாக சென்னையைச் சேர்ந்த ரோகினி மல்டிபிளக்ஸின் சிஇஓ குறிப்பிட்டிருக்கிறார். இதில் முக்கியமான விஷயம், இத்துடன் ஹாலிவுட்டின் முயற்சி முடியவில்லை.

தி பாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ் சீரிஸின் ஒன்பதாவது பாகமான பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் பிரசன்ட்ஸ் – ஹாப்ஸ் அண்ட் ஷா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, கன்னடம் உள்பட பத்து பிராந்திய மொழிகளில் வெளியிடுகின்றனர். இந்தியப் படங்கள் பத்து இந்திய பிராந்திய மொழிகளில் இதுவரை வெளியானதில்லை எனும் நிலையில், முதல்முறையாக ஒரு ஹாலிவுட் படம் 10 இந்திய பிராந்திய மொழிகளில் வெளியாகிறது. 

இந்தப் படத்துக்கு முன்பு வரிசையாக பல ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியாகயிருக்கிறது. மே 17 வெளியாகும் கியானு ரீவ்ஸின் ஜான் விக் சேப்டர் 3, மே 31 வெளியாகும் காட்ஸிலா 2, ஜுலை 19 வெளியாகும் தி லயன் கிங் ஆகியவை அவற்றில் சில. அனைத்துமே இந்திய ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிட்சயமான கதைக்களம். இவை அனைத்தும் ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய பிராந்திய மொழிகளிலும் வெளியாகின்றன. இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் பல ஹாலிவுட் படங்கள் இடம்பெறலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

சென்னை பாக்ஸ் ஆபிஸ், இந்தி பாக்ஸ் ஆபிஸ் என எதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு வாரமும் முதல் 5 இடங்களில் ஏதாவது ஹாலிவுட் படங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்தவார சென்னை பாக்ஸ் ஆபிஸில் 3 வது இடத்தில் தி ஹர்ஸ் ஆஃப் தி வீப்பிங் வுமன்[The Curse of the Weeping Woman] உள்ளது. சென்ற வாரம் வெளியான வெள்ளைப்பூக்கள், மெஹந்தி சர்க்கஸ் போன்ற நேரடித் தமிழ்ப் படங்களைவிட இதன் வசூல் அதிகம் என்பது முக்கியமானது. நாம் மேலே சொன்ன ஹாலிவுட் படங்கள் 100 கோடிகளை இந்தியாவில் அனாயாசமாக தாண்டும். அவை 300 கோடிகள் என்ற புதிய இலக்கை இலக்கை எட்டுமா என்பதே ஹாலிவுட்டின் கேள்வியும் எதிர்பார்ப்பும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here