ஹாலிவுட்டை அசத்திய முதல் தமிழ்க்குரல்: மாணிக்கம் யோகேஸ்வரன்

1
1590

(டிசம்பர் 6,2015இல் வெளியான நேர்காணல் மறுபிரசுரமாகிறது.)

ஹாலிவுட்டைக் கலக்கிய முதல் தமிழ்க் குரல் மாணிக்கம் யோகேஸ்வரனுடையது. 1999ஆம் ஆண்டில் Eyes Wide Shut படத்தில் பாடியதன் மூலம் இந்தச் சாதனையை நிகழ்த்தினார், மாணிக்கம் யோகேஸ்வரன். இசையையே வாழ்வாக்கிய இந்தத் தமிழ்ச் சொந்தம், பெர்லின், லண்டன், சென்னை மாநகரங்களை மையம் கொண்டு தனது இசைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சென்னை மார்கழி இசை விழாக்களில் டிசம்பர் 9 முதல் இவருடைய குரல் கேட்கவிருக்கிறது. இப்போது டாட் காமுக்கு மாணிக்கம் யோகேஸ்வரன் வழங்கிய நேர்காணலைப் படியுங்கள். அவருடைய ஆளுமையை அவரது சொற்களாலே கேட்பது ஆனந்தம் அல்லவா?
முகப்பு ஒளிப்படம் வழங்கிய மார்லன் க்ளெயினுக்கு நன்றி

தமிழரான நீங்கள் நாடு கடந்து இசை உலகில், உங்களுக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளீர்கள். அந்தப் பயணம் பற்றி?

நான் தமிழ் இசையிலும் கர்நாடக இசையிலும் மட்டுமல்லாது மேலைத்தேய இசையிலும் உலகெங்கும் பிரசித்தமான இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வருகிறேன். எனது குரு நாதர் இசை மேதை “பத்மபூஷண்” “சங்கீத கலாநிதி” திரு தி வி கோபால்கிருஷ்ணன் ஆவார். எனது ஆரம்ப கால இசை ஆசிரியர்கள் “சங்கீத பூஷணம்” திரு எஸ் பாலசிங்கம் அவர்களும், “சங்கீத பூஷணம்” திரு ப முத்துக்குமாரசாமி அவர்களும் ஆவர்கள். இவர்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசை அரசு M M தண்டபாணி தேசிகர் அவர்களின் நேர் ஆள்கையில் கற்றுத் தேர்ந்தவர்கள். என் பூர்வீக பிறப்பிடமாகிய யாழ்ப்பாணத்தில் தமிழ் இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர்கள் இந்த இரு ஆசான்கள் என்றால் மிகையாகாது.
உலகின் உன்னத இசை விழாக்களில் குறிப்பாக பி பி சி இன் வருடாந்தர இசை விழா (BBC Proms) முதல், கிளாஸ்டன்பெரி (Glastonbury), அமெரிக்க இசைவிழா (Arts and Ideas Festival USA), ஸ்பிட்டல் பீல்ட் (Spitalfield festival London), வோமாட் (Womad UK), ஸ்ருட்காட் ஜாஸ் ஓபன் (Stuttgart Jass Open) சென்னையில் நடைபெறும் மார்கழி இசைவிழா வரை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் உலகெங்கும் பல இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறேன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானிய மஹாராணியாரின் ஜுபிலி விழாவில் ஜோசலீன் பூக் அவர்களுடைய ஆகஸ்ராவில் தமிழில் பாடியதைப் பெருமையாக கருதுகிறேன்.
ஸ்ரான்லி கியூபிறிக் (Stanley Kubrick) அவர்களுடைய தயாரிப்பான ஐஸ் வைட் சட் “Eyes Wide Shut” – 1999 ஹாலிவூட் திரைப்படத்தில் தமிழில் பாடியதன் மூலம் ஹாலிவூட்டில் பாடிய முதல் தமிழர் எனும் பெருமையைப் பெற்றுள்ளேன். இதைத்தொடர்ந்து ஹாலிவூட்டின் உன்னத இயக்குனர் ஸ்பைக் லீ (Spike Lee) அவர்களின் “25th Hour” எனும் திரைப்படத்திலும் மற்றும் பிரித்தானிய தயாரிப்பான “Brick Lane” ஆகிய திரைப்படங்களிலும் பாடியுள்ளேன்.
நோர்வே நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 200 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஓபெரா நிகழ்ச்சியில் (Bergen National Orchestra) பங்கு பற்றி அதில் குறிப்பாக மஹாத்மா காந்தி அடிகளின் வேடத்தில் பாடியபோது நோர்வே நாட்டு முடிக்குரிய இளவரசரின் பாராட்டுகளும் அவரது விருந்து உபசாரமும் கிடக்கப்பெற்றதுபோல நிகழ்ச்சிகள் எனது மனதை விட்டகலாதவை.
எனது இசைப் பயணம் இலண்டன் முதல் பல ஐரோப்பிய மாநகரங்களிலும், இந்தியா, இலங்கை, சீனா, அமெரிக்கா, ஆபிரிக்கா, மலேசியா, மத்திய ஆசியா, சேர்பியா, ரூசியா, ஸ்கண்டினேவிய நாடுகள், மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கச்சேரி மேடைகளிலும், மேலைத்தேய கலாச்சார விழா மேடைகளிலும், பரதநாட்டிய, மிருதங்க அரங்கேற்ற மேடைகளிலும் ஒலிப்பதை இசை உலகம் அறியும். (www.myogeswaran.com)

MY2

கர்நாடக இசையின் மீது பிரியம் வர காரணம் என்ன?

சிறு வயதில் இருந்து இசை மீது மிகவும் பிரியமாக இருந்த நான் பாடசாலை நாட்களில் இசையை மிக ஆர்வத்துடன் கற்றேன். நாதஸ்வர இசையில் மிகவும் ஈர்க்கப்பட்டேன். யான் பயின்ற கலைக்கூடமாகிய யாழ் இந்துக் கல்லுரியில் எனது தேவாரப் பண்களை ஒலிப்பதிவு செய்து பாடசாலை முடியும் நேரம் இப்பாடல்களை ஒலிபரப்புவது அப்போதைய வழக்கமாக இருந்தது. யாழ்ப்பாணம் அரியாலையில் சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழாவில் எனது முதல் கச்சேரி நடந்தது, அன்று தொடக்கம் பக்திப்பாடல்கள் பாடுவதில் மிகவும் பிரசித்தமான இசைக்குழுவாக ஈழத்தின் பல பாகங்களிலும் இசை நிகழ்சிகளை நடாத்தி வந்தேன். அன்று தொடங்கிய எனது இசை நிகழ்ச்சிகள் பல ஆயிரங்களைத் தாண்டியது என்றால் மிகை இல்லை.

ரஹ்மானுக்கு முன்னரே ஹாலிவுட் உலகில் கால் பதித்த முதல் தமிழர் நீங்கள்தான். அதை, ஊடகங்கள் வெளிகொணரவில்லை என நீங்கள் கருதியது உண்டா?

இது வரலாற்றில் பதிக்கப்படவேண்டிய செய்தி. ஆகிலும் ஏனோ இந்தச்செய்தி பெரும்பாலும் வெளிவரவில்லை என்பது உண்மைதான். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆயினும் என்றோ ஒரு நாள் இச்செய்தி பரவலாக பேசப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

Eyes Wide Shut உள்ளிட்ட படங்களில் இசைமைத்த அனுபவம் பற்றி?

கியூபிறிக் அவர்கள் எனது குரலை முந்திய ஒலிப்பேழையில் கேட்டு அதன்பின் இத்திதைப்படத்தில் நான் பாட வேண்டும் என என்னை ஒப்பந்தம் செய்தார்கள். இச்செய்தி என்றுமே மறக்க முடியாத செய்தி. ஓலிப்பதிவு லண்டனில் எயர் (Air) ஸ்டுடியோவில் நடந்தது, நினைவில் பசுமையாக இன்றும் உள்ளது. மைகிறேசன் (Migration) எனும் இந்த ஒலிப்பதிவு உலகில் பல பாகங்களிலும் ஒளி/ஒலிபரப்பாகியுள்ளது. இந்த ஒலிப்பதிவில் பாடியது மட்டுமல்ல தபேலா கஞ்சிரா ஆகிய தாள வாத்தியங்களையும் இசைத்துள்ளேன். மிகவும் உன்னத அனுபவம்.
இதைத்தொடர்ந்து ஹாலிவூட்டின் இயக்குனர் ஸ்பைக் லீ (Spike Lee) அவர்களின் “25th Hour” எனும் திரைப்படத்திலும் மற்றும் பிரித்தானிய தயாரிப்பான “Brick Lane” ஆகிய திரைப்படத்திலும் பாடியுள்ளேன். பல விளம்பரங்களில் குறிப்பாக கோடிக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்த T Mobile commercial Heathrow வருகை போன்ற பல அனுபவங்கள் மறக்க முடியாதவை.

தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பீர்களா? அப்படி இசைமைத்தால் எந்த தமிழ் இயக்குனருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

தமிழ்த் திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மிகவும் மகிச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். எந்த இயக்குநராயினும் நல்ல கலை அம்சம் மிக்க திரைப்பட தயாரிப்பாக இருந்தால் மேலும் சிறப்பாக பணி ஆற்றலாம் என எண்ணுகின்றேன்.

உங்களுடைய மறக்கமுடியாத ரசிகர் பற்றி? உங்களுக்குப் பிடித்த இசைமைப்பாளர்?

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் தாயகம் செல்ல வாய்ப்புக் கிட்டியது. தாயக மண்ணை தாங்கும் கடலும் அம்மண்ணின் வாசமும் என்னை 31 வருடங்களுக்கு முன் இழுத்துச் சென்றன. எந்த திருத்தலத்தில் எனது இசை பயணம் ஆரம்பமானதோ அதே சித்தி வினாயகர் ஆலயத்தில் எனது இசை நிகழ்ச்சி நடை பெற்றது. அந்த அரியாலை மண்ணில் சிறு வயதில் இருந்து வளர்ந்த ஞாபகம், இசை பயின்ற ஆசான் திரு பாலசிங்கம் அவர்கள் 80 அகவைகளைத் தாண்டியும் உடல் தளர்ந்த போதும் என்னை மனப்பூர்வகமாக அரவணைத்ததை மறப்பேனோ?
பல அன்பர்கள் என்னை அன்புடன் நினைவுகூர்ந்த ஞாபகம் பல வருடங்கள் கழிந்தும் எனது இசையை மறவாத ரசிகர்கள் இவர்கள்தான் எனது சிறந்த ரசிகர்கள்.

இசை அமைப்பாளர்கள் பற்றி:

ஒவ்வொரு இசை அமைப்பாளரிலும் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் இருக்கும். நான் அதை மிகவும் ரசிப்பேன். அது ஜோசலீன் பூக் (Jocelyn Pook), ஒர்லாண்டோ கௌவ், (Orlando Gough), தெரன்ஸ் பிளான்சாட் (Terence Blanchard) ஆகிய மேலைத்தேய இசை அமைப்பாளராயினும் சரி, T R பாப்பா சார், V குமார் சார் , K S ரகுநாதன் சார், புகழேந்தி சார் போன்ற நம் நாட்டு இசை அமைப்பாளராயினும் சரி, மற்றும் திரைப்படத்துறையில் உள்ள தலைசிறந்த பல ஜாம்பவான்களாயினும் சரி அவர்களுடைய தனித்துவத்தை மிகவும் ரசிப்பேன்.

MY1

உங்களது அடுத்த கட்ட இசை பயணம் பற்றி?

இசை அமைப்பது எனது முக்கிய பணியாக கருதுகிறேன். தமிழ் இலக்கியச் சுவடிகளை இசையாக வெளிக்கொணர்வதில் மிக ஆர்வமாக உள்ளேன். திருக்குறளை முழுதுமாக 133 இராகங்களில் ஒலிப்பதிவு செய்வது திருமுறைகளை இசையாக ஒலிப்பதிவு செய்வது போன்ற பணிகளை ஆரம்பித்துள்ளேன்.

உலகப்பொதுமறையாகிய திருக்குறளை 133 இராகங்களில் பாடி (மொத்தம் 266 குறள்கள்) ஒலிப்பேழை வெளியிட்டது மட்டுமல்லாது திருக்குறளை பல மேடைகளிலும், ஒளி/ஒலிப்பதிவுகளிலும் பாடி வருகிறேன். ஈழத்தில் அமைதிக்காக உருவாக்கி வெளியிட்ட பீஸ் ஃபார் பாரடைஸ் “Peace for Paradise” – 1995 எனும் ஒலிப்பேழை கடந்த 2005ம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கத்தைப் பிரதிபலிக்கும் “life goes on” எனும் காணொளி, Unicef அமைப்பினால் உள்வாங்கப்பெற்று அவ்வமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

இப்போது என்றுமே கண்டிரா அளவிற்கு மழை வெள்ளம் தென் இந்திய மாநிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எமது மக்கள் தாங்கொணாத் துயரத்தை எதிர் கொண்டுள்ளனர். இந்த நிலை மாறி வெகு விரைவில் ஓர் சீரான வாழ்க்கை முறை வர வேண்டி ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன். எல்லா மக்களும் சுக வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன். எம் உறவுகளின் கஷ்ட நிலை மாற என்னால் முடிந்தவரை இசையால் முயற்சி செய்வேன். இந்த நேர்காணல் மூலம் எல்லோருக்கும் வருகிற புத்தாண்டு சீரும் சிறப்படனும் மலர எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ManickamY

சென்னை மார்கழி சீசனில் மாணிக்கம் யோகேஸ்வரனின் கச்சேரி விவரங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன:

Yogeswaran – Concerts in the December Season 2015.

9th of December for “Sampoornam”

Arkay Convention Centre, Luz, Mylapore Chennai 04.
Full Address: 146/3 R.H.Road, OMS Lakshana, Mylapore, Chennai 600004.
Concert starts at 4.30PM

13th Of December for Gandarva Gana Sabha, Ambattur Chennai.
Concert from 6.30 to 8.30PM
Venue address:
Sathsangam Road
Venkatta Puram
Ambattur
Cheenai 600053
Next lane to Karur Vaisa Bank.

22nd of December for Sruthy Laya Kendra – MLA Concerts (associated with Sri Krishna Gana Sabha)

Sri Kamakoti Hall
Sri krishna Gana Sabha Annex
T.Nagar
Chennai.
Full address: Maharajapuram Santhanam Salai, T Nagar, Chennai, Tamil Nadu 600017, India.
From 5.15PM to 6.45PM
Sri V L Kumar Violin
Sri P Kirupakaran Mirdangam

30th of December for Thamil Isai Sangam

No. 5, Raja Annamalai Hall, Esplanade
Chennai – 600108 (Near High Court)
From 5.00PM to 6.45PM

V L Kumar Violin
J Vaidhyanathan Mirdangam
Sundar Mohrsing

1 கருத்து

  1. Blessing of Ariyalai Sithivinayagar and your talent has taken you to the highest level. We are very proud of you to return back to Ariyalai Sithivinayagar temple last year and to a do great performance on the Ther festival.

ஒரு பதிலை விடவும்