கிறிஸ்துமஸ், புது வருடம் அருகில் நெருங்கி விட்டது. அதனால் இந்த மாதம் முழுவதும் விதவிதமான கேக் வகைகள் செய்து அதை நீங்கள் எளிதான முறையில் செய்ய உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். கேக் என்றால் வேண்டாம் என்று கூறுபவர்கள் மிகவும் குறைவு. அதிலும் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள்.

பதப்படுத்தப்பட்ட பழங்களை வைத்து கேக் செய்யப் போகிறேன். பொதுவாக ரம், பிராந்தியில் ஊற வைத்துப் பண்ணுவார்கள்.

எல்லோரும் அதை விரும்புவதில்லை. எனவே அதற்குப் பதில் ஆரஞ்சுப் பழத்தின் சாறு ஊற்றிச் செய்துள்ளேன். இதைச் செய்து கிறிஸ்துமஸ் அன்று வரும் விருந்தினர்களுக்குக் கொடுத்து மகிழவும்.

தேவையான பொருட்கள்

வெண்ணெய் -1/2 கிண்ணம்

பிரவுன் சீனி – 1/2 கிண்ணம்

லேசாக அடித்த முட்டை -1 1/2 முட்டை

1 ஆரஞ்சு – சாறு எடுப்பதற்கு முன்பு அதன் மேல் தோலை 1 தேக்கரண்டி வருமாறு துருவிக் கொள்ளவும்

1 எலுமிச்சை -மேல் தோல் மட்டும் துருவிக் கொள்ளவும்

வால்நட் -1/2 கிண்ணம் வருமாறு நறுக்கி கொள்ளவும்

உலர்ந்த பழங்கள் -அத்திப்பழம், திராட்சை, செர்ரி அப்ரிகாட், [எல்லாம் சேர்த்து] 500கிராம்

மைதா -1 கிண்ணம்

பாகிங் பவுடர் -1/2 தேக்கரண்டி

பொடித்த பாதாம் -1/4 கிண்ணம் + 1 மேசைக் கரண்டி

உப்பு -1/4 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஓவனை 160 டிகிரிக்கு சூடுபடுத்தவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, பவுடர் பண்ணிய பாதாம், உப்பு, பாகிங் பவுடர் எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும்.

வேறொரு பாத்திரத்தில் உலர்ந்த பழங்கள், வால்நட், அதனுடன் 2 தேக்கரண்டி மைதா கலவையை எடுத்து கலந்துகொள்ளவும்.

அப்படிச் செய்வதால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிராக இருக்கும்.

வேறொரு பாத்திரத்தில் வெண்ணெய் எடுத்துக் கொண்டு எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு மிருதுவாகும் வரை அடிக்கவும் .

அதன் பின் பிரவுன் சீனி சேர்த்து 30 நிமிடங்களுக்கு அடிக்கவும். பின்பு சிறிது சிறிதாக முட்டை சேர்த்து அடிக்கவும்.

அதனுடன் ஆரஞ்சு சாறு, துருவிய தோல் எல்லாம் சேர்த்து அடிக்கவும். பிறகு உடைத்த வால்நட், உலர்ந்த பழங்கள் போட்டு ஒரு மரக் கரண்டி கொண்டு கலக்கவும். அதனுடன் மாவு கலவை சேர்த்து நன்று கலந்துகொள்ளவும்.

கேக் டின் எடுத்து அதில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். அதன் மேல் பட்டர் பேப்பர் போட்டு அதில் செய்து வைத்த கலவையைப் போடவும். ஓவனில் வைக்கவும். 160 டிகிரிக்கு 1 மணி நேரம் பேக் செய்யவும். அதன் பின் 150 டிகிரி வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். உடன் ஓவனில் இருந்து எடுத்துவிடவும். ஆறியவுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்