ஹாங்காங் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் சட்ட மசோதா – சீன நாடாளுமன்றத்தில் தாக்கல்

On Thursday, China proposed security laws that could effectively subvert Hong Kong’s remaining freedoms and bring it under full Chinese control.

0
120

ஹாங்காங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். வெளியுறவு, ராணுவம் ஆகிய இரு துறைகளில், ஹாங்காங்கை சீனா கட்டுப்படுத்தும்.

மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகிக்கும். 70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹாங்காங் பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது.

1997-ம் ஆண்டு ஹாங்காங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

ஒட்டுமொத்த ஹாங்காங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது.

ஆனாலும் சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

அதனை தொடர்ந்து, ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கையோடு ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதுபற்றி சீன நாடாளுமன்ற கமிட்டியின் துணை தலைவர் வாங் சென் கூறுகையில், “ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு புதிய சட்ட கட்டமைப்பையும் அமலாக்க நெறிமுறையையும் நிறுவுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது” என கூறினார்.

புதிய சட்டம் ஹாங்காங்கின் நிலப்பரப்பில் அனுமதிக்கப்படாத பல சுதந்திரங்களை முடிவுக்கு கொண்டு வந்து முன்னாள் இங்கிலாந்து காலனியின் மீது சீனாவுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை கொடுக்கும் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஹாங்காங் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில் “இந்த சட்டம் பிரிவினை, வெளிநாட்டு தலையீடு, பயங்கரவாதம் மற்றும் மத்திய அரசை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து தேசத்துரோக நடவடிக்கைகளையும் தடை செய்யும்” என்றார்.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஹாங்காங்கை சேர்ந்த ஜனநாயக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இது ‘ஒரு நாடு 2 அமைப்புகள்’ நடைமுறையை அழிக்கும் முயற்சி என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதற்கிடையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் நாடாளுமன்றத்தில் ஜனநாயக சார்பு எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். 

நன்றி : மாலைமலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here