ஹவ் டு ட்ரெய்ன் யுவர் ட்ராகன் டிரையாலஜியின் கடைசிப்பாகம் ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் – தி ஹிடன் வேர்ல்ட்.

பெர்க் பிரதேச மக்கள் – பெர்கியன்ஸ் – முதல் பாகத்தில் டிராகன்களின் விரோதிகள். டிராகன்களை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உயிர்களாக கருதி வேட்டையாடினார்கள். டிராகன்களும் அவர்களை அவ்வப்போது தாக்கி அவர்களின் எண்ணத்தை உண்மையாக்கின. பெர்கியன்ஸின் தலைவரின் மகன் கிக்கப் அவர்களின் எண்ணத்தை மாற்றுகிறான். டிராகன்களை பழக்கி, அவைகளுடன் சுமுகமாக வாழ முடியும் என்பதை உணர்த்துகிறான். அதற்கு பிளாக் பியூரி எனப்படும் சிறிய கறுப்பு டிராகன் அவனுக்கு உதவுகிறது. வாலறுந்த அந்த டிராகனின் மூலம் டிராகன்கள் குறித்து கிக்கப் அறிந்து கொள்கிறான். அதற்கு டுத்லெஸ் என்று பெயரும் வைக்கிறான்.

மூன்றாவது பாகத்தில் தந்தை இறந்த நிலையில் பெர்கியன்ஸின் தலைவராக கிக்கப் பொறுப்பேற்றிருக்கிறான். டிராகன் வேட்டையாடிகள் பிடித்து வைத்திருக்கும் டிராகன்களை விடுவித்து பெர்க் பிரதேசத்துக்கு கொண்டு வந்ததால் அங்கு மனிதர்களுக்கும், டிராகன்களுக்கும் இட நெருக்கடி ஏற்படுகிறது. இரு தரப்பும் எதிரிகளின் தொந்தரவு இல்லாமல் வாழ, கிக்கப் ஒரு நிலத்தை தேர்வு செய்தாக வேண்டும். அடிவானத்துக்கு அந்தப் பக்கம் கடலில் உள்ள நீர்வீழ்ச்சியையும், அதில் உள்ள டிராகன்களின் ரகசிய உலகத்தையும் குறித்து அவனது சின்ன வயதில் தந்தை சொன்னது அவனுக்கு ஞாபகம் வருகிறது. அந்த ரகசிய உலகத்தை நோக்கி பெர்கியன்ஸ்களையும், டிராகன்களையும் அவன் வழிநடத்தி செல்கிறான். நடுவில் ஓரிடத்தில் இளைப்பாறுகிறார்கள். பெர்கியன்ஸுக்கு ரகசிய உலகம் குறித்து நம்பிக்கையில்லை. தற்காலிக ஓய்வு எடுக்கும் இடமே போதும் என்கிறார்கள்.

இதனிடையில் டிராகன் வேட்டையாடியான வில்லன் க்ரிம்மல் கிக்கப்பின் தோழனான டுத்லெஸ்ஸை பிடித்து, அதனை ஆல்பா டிராகனாக்கி மற்றி அனைத்து டிராகன்களையும் தனக்குக்கீழ் கொண்டு வர நினைக்கிறhன். அதற்காக ஒயிட் பியூரி டிராகனை அனுப்பி வைக்கிறான். அவன் எதிர்பார்த்தது போல் பிளாக் பியூரியான டூத்லெஸ் அந்த வெள்ளை டிராகனின் பின்னால் செல்கிறது. அவை இரண்டும் டிராகன்களின் சொந்த இடமான ரகசிய உலகத்தை சென்றடைகின்றன. டூத்லெஸ்ஸை அங்குள்ள டிராகன்கள் தலைவராக ஏற்றுக் கொள்கின்றன.

இந்நிலையில், டூத்லெஸ்ஸை தேடிவரும் கிக்கப்பையும், ஆஸ்ட்ரிட்டையும் ரகசிய உலகத்தில் உள்ள டிராகன்கள் பார்த்து விடுகின்றன. அவர்களை கொல்லவரும் அவற்றிடமிருந்து டூத்லெஸ் இருவரையும் காப்பாற்றி அவர்கள் இடத்தில் பத்திரமாகச் சேர்க்கிறது. டூதலெஸைத் தேடி பின்னாலேயே ஒயிட் பியூரியும் வருகிறது. இந்த நேரத்தில் க்ரிம்மல் தனது டிராகன்களுடன் அங்கு தோன்றி டூத்லெஸ், ஒயிட் பியூரி இரண்டையும் சிறைபிடிக்கிறான். அவற்றை பணயமாக வைத்து மற்ற அனைத்து டிராகன்களையும் தன்னுடன் வரும்படி செய்கிறான். பின்னாலேயே செல்லும் கிக்கப்பும், தோழர்களும் க்ரிம்மல் மற்றும் அவனது டிராகன்களுடன் போரிட்டு டூத்லெஸையும், ஒயிட் பியூரியையும் மற்ற டிராகன்களையும் காப்பாற்றுகிறார்கள்.

.முதலிரு பாகங்களுடன் ஒப்பிடுகையில் மூன்றாவது பாகத்தின் கதையும், உணர்வுநிலைகளும் ஒருபடி குறைவானதாக உள்ளன. திட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து சோர்ந்து போகும் கிக்கப்புக்கு ஆஸ்ட்ரிட்டின் நேசம் புத்துணர்ச்சி தருகிறது. ஆனால், இந்த இடமும்கூட உணர்வெழுச்சி இன்றி சாதாரணமாக கடந்து போகிறது. கிக்கப் – டூத்லெஸ் நட்பும், பிரிவும்கூட அதிகம் பாதிப்பதில்லை. இறுதிக்காட்சியில், ரகசிய உலகுக்கு டிராகன்களுடன் பெர்கின்ஸ்கள் செல்லாமல் டூத்லெஸ் உள்பட அனைத்து டிராகன்களையும் அனுப்பி வைப்பது இனிய முடிவு. அதன் பிறகு கிக்கப் – ஆஸ்ட்ரிட் தம்பதி தங்களின் இரு குழந்தைகளுடன் வருவதும், டூத்லெஸ்ஸும் ஒயிட் பியூரியும் தங்களின் மூன்று குட்டிகளுடன் அவர்களுடன் விளையாடுவதும் குழந்தைகளை பரவசப்படுத்தும்.

டிராகன்கள் கடல் மீது பறந்து செல்வது, டூத்லெஸ் ஒயிட் பியூரியை பின்தொடர்ந்து டிராகன்களின் ரகசிய உலகத்துக்கு செல்வது, அவர்களைப் பின்தொடர்ந்து கிக்கப்பும், ஆஸ்ட்ரிட்டும் செல்வது என பல காட்சிகள் 3டியில் பிரமாண்ட அனுபவத்தை தருகின்றன.

வியாக்கிழமை இப்படம் இந்தியாவில் வெளியானது. தமிழிலும் வெளியிட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அழைத்துச் செல்ல இப்படம் நல்ல தேர்வு. 2டியை விட 3டியே சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here