ஸ்ரேயாவின் சண்டக்காரி – ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட் வழி மல்லுவுட்

0
242


வேற்றுமொழிப் படங்களை அதன் சாயல் தெரியாமல் உருவுவதில் மலையாளிகள் கெட்டிக்காரர்கள். அப்படி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று மை பாஸ். ஜீத்து ஜோசப் இயக்கிய படம். இவரது த்ரிஷ்யம் சஸ்பெக்ட் எக்ஸ் படத்தின் தழுவல் என்ற குற்றச்சாட்டும் உண்டு. த்ரிஷ்யத்துக்கு முன் வெளியானது மை பாஸ். திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்தது.

கேரளாவின் வனப்பு மிகுந்த கிராமத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் திலீப். எப்படியாவது கேரளாவைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என்பது அவரது ஆசை. முதல்கட்டமாக வேலைக்காக மும்பை செல்கிறவர் ஐடி கம்பெனி ஒன்றில் மம்தா மோகன்தாஸிடம் உதவியாளராக சேர்கிறார். மம்தா பொம்பள ஹிட்லர். நாலு நாளுக்கு மேல் யாரும் அவரிடம் வேலை பார்க்க முடியாது. திலீப் நாள்கள் வாரங்களை கடந்து சாதனை படைக்கிறார்.

மம்தாவின் பூர்வீகம் கேரளா என்றாலும் படித்தது வளர்ந்தது ஆஸ்ட்ரேலியா. அவர் ஆஸ்ட்ரேலியா குடியுரிமை பெற்றவர். இதனால் விசா பிரச்சனையால் தொடர்ந்து இந்தியாவில் பணிபுரிய சிக்கல் ஏற்படுகிறது. இந்தியர் ஒருவரை திருமணம் செய்தால் விசா பிரச்சனை சரியாகிவிடும் என்பதால் திலீபை தனது காதலராக நடிக்கச் சொல்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறுகிறார். அதனை அவர் நம்ப மறுக்க, திலீபின் வீட்டிற்குச் சென்று அவர்களின் சம்மதம் பெற்று போலியாக திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். தன்னை அலுவலகத்தில் உருட்டி மேய்ந்த மம்தாவை பழிவாங்க இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தும் திலீப் கேரளாவில் உள்ள தனது தரவாட்டில் மம்தாவை டீஸ் செய்வதும், அவர் பதிலடி கொடுப்பதும், திலீபின் குடும்பத்திடமிருந்து இருவரும் போலி காதல் கம் திருமணத்தை மறைப்பதும், கடைசியில் இருவரும் உண்மையாகவே ஒன்று சேர்வதுமாக கதை பயணிக்கும்.

திலீப் – மம்தா ஜோடியின் கலக்கல் காமெடிப் படங்களில் இதுவும் ஒன்று (இன்னொன்று 2 கன்ட்ரீஸ்). சாய் குமார், சீதா திலீபின் அப்பா, அம்மாவாக படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் 2012 இல் வெளியானது. இது 2009 இல் வெளியான தி புரப்போசல் ஆங்கிலப் படத்தின் தழுவல். ஏற்கனவே சொன்னது போல் ஆங்கிலப் படம் என்பது தெரியாத அளவுக்கு இடைவேளைக்குப் பின் மலையாள சென்ட் மூக்கை அடைக்கும்.

தி புரப்போசல் படத்தின் நாயகி கனடாவைச் சேர்ந்தவர். வேலை பார்ப்பது யுஎஸ்ஸில். அவருக்கு விசா பிரச்சனை. அமெரிக்க சிட்டிசன் ஒருவரை மணந்தால் விசா பிரச்சனை தீர்ந்துவிடும். அதனால் தனது உதவியாளரை தனது காதலராக நடிக்கச் சொல்வார். திருமணம் முடிந்தாலும் தாம்பத்தியத்துக்கு மட்டும் சம்மதிக்க மாட்டார். காரணம் நாயகிக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருப்பார். 

ஆங்கிலப் படத்தில் சான்ட்ரா புல்லக் நாயகி. நாயகன் ரேயன் ரெனால்ட்ஸ். சான்ட்ரா புல்லக் புகுந்து விளையாடியிருப்பார். அந்த வருடத்தின் சிறந்த ரொமான்டிக் காமெடியாக இப்படம் கருதப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 314 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இந்த கதையை சுட்டுதான் ஜீத்து ஜோசப் மை பாஸ் படத்தை எடுத்தார்.

தி புரப்போசல் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் சண்டக்காரி என்ற பெயரில் அப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். நாயகி ஸ்ரேயா. நாயகன் விமல். ஆர்.மாதேஷ் இயக்கம். மை பாஸ் படத்தில் திலீபின் துறுதுறு நடிப்பும் காமெடியும் அப்படத்தின் உயிரோட்டமாக அமைந்தது. அவர் இடத்தில் விமல்.

பாஸ்… சரியா வருமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here