ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார் – சிக்கிய பிரபல இயக்குனர்

0
297
Sri Reddy

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் ஸ்ரீ லீக்சில் தினம் ஒரு கருப்பு ஆடு சிக்குகிறது. நடிகர் சங்கத்தில் உங்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்கிறோம், அடையாள அட்டை தருகிறோம் என கூறியும் ஸ்ரீரெட்டி சமாதானமடையவில்லை. அவரது உண்மை விளம்பி கதாபாத்திரம் தொடர்கிறது.

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் அதிகம், படுக்கைக்கு சென்றால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. நடிகர் சங்கத்தில் என்னை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகை ஸ்ரீரெட்டி முன்வைத்தார். தெலுங்கு ஃபிலிம் சேம்பரின் முன் அவர் அரைநிர்வாணமாக போராட்டம் நடத்திய பிறகு இந்த விவகாரம் தலைப்புச் செய்தியானது.

ஸ்ரீரெட்டி முதலில் குற்றம்சாட்டியது, பிரபல இயக்குனர் சேகர் கம்முலா. ஸ்ரீரெட்டி தன்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டை மறுத்த சேகர் கம்முலா, இது அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு, சம்பந்தப்பட்ட ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்றார். ஸ்ரீரெட்டி அசரவில்லை.

ஸ்டுடியோவுக்கு தன்னை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என நடிகர் ராணாவின் தம்பி அபிராம் மீது அடுத்த குற்றச்சாட்டை வைத்தார் ஸ்ரீரெட்டி. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். ராணா குடும்பம் இதுதொடர்பாக இன்னம் வாய் திறக்கவில்லை.

இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று அழைத்து எழுத்தாளர் கோனா வெங்கட் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அடுத்த குற்றச்சாட்டை வைத்தார் ஸ்ரீரெட்டி. அப்படி எதுவும் நடக்கவில்லை. ஸ்ரீரெட்டி பொய் சொல்கிறார். சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்றார் கோனா வெங்கட்.

அடுத்து பாடகர் ஸ்ரீராமுடன் வாட்ஸ்அப்பில் நடைபெற்ற உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டார் ஸ்ரீரெட்டி. அதில் ஸ்ரீராம் ஸ்ரீரெட்டியின் முன்னழகையும், பின்னழகையும் வர்ணித்து பேசியிருந்தார். அந்த உரையாடலில் ஸ்ரீரெட்டியை படுக்கைக்கு அழைக்கும் ஆர்வம் ததும்பி நின்றது.

ஸ்ரீரெட்டியை இப்படியே விட்டால் மொத்த தெலுங்கு சினிமாவையும் கழுவி கவிழ்த்துவிடுவார் என்று, அவரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இணைத்து அடையாள அட்டை தருவதாக நடிகர் சங்கம் இறங்கி வந்தது. ஆனாலும், ஸ்ரீரெட்டி அடங்கவில்லை. தயாரிப்பாளர் அக்கட அப்பாராவ் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்தார் என்று அடுத்த குற்றச்சாட்டை முன் வைத்தார். அத்துடன் பிரபல இயக்குனர் கொரட்டல சிவா போனில் தன்னிடம் வழிந்ததாகவும், நேரில் வரும்படி வற்புறுத்தியதாகவும் இன்னொரு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

கொரட்டல சிவா மகேஷ்பாபு, ஜுனியர் என்டிஆர் என முன்னணி நட்சத்திரங்களை வைத்து தொடர்ந்து படம் செய்கிறவர். அவர் மீதான குற்றச்சாட்டு தெலுங்கு சினிமாவை கொஞ்சம் அதிரத்தான் செய்திருக்கிறது.

ஸ்ரீ லீக்ஸில் மாட்டிக் கொண்ட பிரபலங்கள், போலீசில் புகார் அளிப்போம், கேஸ் போடுவோம் என்று எகிறினார்களே தவிர சேகர் கம்முலா தொடங்கி இதுவரை யாரும் ஸ்ரீரெட்டி மீது அதிகாரப்பூர்வமாக புகாரோ, வழக்கோ தொடுக்கவில்லை.

ஸ்ரீ லீக்ஸில் அடுத்து யார் பெயரோ என்ற பயத்துடனே தெலுங்கு சினிமா தினம் கண்விழிக்கிறது.

இதையும் படியுங்கள்: “அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம்…

இதையும் படியுங்கள்: மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்