ஸ்ரீ பெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை, போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ‘சால்காம்ப்’ என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்த உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மொபைல்போன் சந்தையில் பெரும்பங்கு வகித்த நோக்கியா நிறுவனம், கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் தொழிற்சாலையை துவங்கியது. இது 2008-2009-ல்  மிகப்பெரிய மொபைல் உற்பத்தி ஆலையாக உருவெடுத்தது. அதன்பிறகு, தமிழக அரசுடன் ஏற்பட்ட வரி சிக்கல் காரணமாக மூட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

பின்னர், ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ஃட் நிறுவனம் ஏற்று நடத்தியது. ஆனால் மைக்ரோசாப்ஃட் நிறுவனமும் கைவிட்டதால், 2014 நவம்பர் 1-ம் தேதி ஆலை மூடப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீ பெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை, போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ‘சால்காம்ப்’ என்ற நிறுவனம் ஏற்று நடத்த உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், “ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது. இந்த போன் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, உள்ளூர் விற்பனைக்கும் அனுப்பப்படும். சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் நோக்கியா ஆலையை, சால்காம்ப் என்ற நிறுவனம் ஏற்று நடத்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.

ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் இந்த நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியை துவக்கும். இதனால் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 50 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக கூடுதலாக 2000 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.” எனத் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here