ஸ்னோலின்

Snowlin, 17, was shot dead by the police during the Thoothukudi Massacre on May 22, 2018

1
1005

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேர்களில் ஏழு பேர் வீடுகளுக்கு நேரில் சென்றிருந்தோம். அத்தனை சோகத்திற்கு மத்தியிலும் அவர்கள் எங்களை உட்காரவைத்துத் தங்களின் இழப்பை கண்ணீர் மல்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டும் சட்ட பூர்வமாக அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை விளக்கிக் கொண்டும் இருந்தார். சில நுணுக்கமான ஆலோசனைகளையும் சொன்னார்.

அன்று நிகழ்ந்த ஒவ்வொரு மரணமும் நம்மை உலுக்குபவையானாலும், மிகவும் மனதை நெகிழ்த்தியவற்றில் 17 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் மற்றும் 46 வயது குடும்பத் தலைவி ஜான்சி ஆகியோரின் படுகொலைகள்தான்.

ஸ்னோலின் பலரும் நினைப்பது போல எந்த இயக்கத்திலும் உறுப்பினர் இல்லை. ஒரு எளிய மீனவக் குடும்பத்துப் பள்ளி மாணவி. அவளின் தந்தை கடந்த ஆறு மாதங்களாக கடல் தொழிலும் செய்ய இயலாமல் அரசு செய்துள்ளது. பெரிய வள்ளங்களுக்கான தடையால் அவர் தொழிலுக்குப் போவதில்லை.

இந்த மே 5 அன்றுதான் நூறு நாட்களாக நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் முதன் முதலாக கூட்டம் கேட்கப் போயுள்ளாள். நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு அவளை மிகவும் ஈர்த்துள்ளது. அன்றிலிருந்து 22ந்தேதி வரை அந்தப் 17 நாட்களிலும் தொடர்ந்து போராட்ட நிகழ்ச்சிகளில் சென்று கலந்து கொண்டு இருந்திருக்கிறாள்.

தான் படித்து முடித்துவிட்டு வக்கீலாக வேண்டும் என்பது அவளின் ஆசை. மே 22 அன்று நடக்க இருந்த அந்த முற்றுகைப் போராட்டத்தை அக்குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கதையைக் கேட்டபோது எனக்கு மறைந்த தோழர் மாயாண்டி பாரதி (ஐ.மா.பா) அவர்கள், “போராட்டமுன்னா என்னா? திருவிழா.. தேர்த் திருவிழாடா..” என முப்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னது என் காதில் ஒலித்தது.

மே 22 போராட்டம் அன்றும் ஒரு திருவிழாவுக்குச் செல்வதைப் போலத்தான் அந்தக் குடும்பம் போராடச் சென்றுள்ளது. ஸ்னோலின், அவளது அம்மா, அண்ணன், அண்ணன் மனைவி, அவர்களின் இரண்டு குழந்தைகள், ஒன்றின் வயது இரண்டு, மற்றதின் வயது 6 மாதம், எல்லோரும் சென்றுள்ளனர்.

VVD சிக்னலில் ‘பேரிகேட்’களைக் கடக்கும்போது தடி அடி, மேம்பாலத்தில் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் எல்லாவற்றையும் கடந்து ஊர்வல முழக்கங்களுடன் அந்தக் குடும்பம் கூட்டத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தது.

ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது அம்மாவும் குழந்தைகளும் கேட் வாசலில் நின்றுள்ளனர். உள்ளே தோழியுடனும் நுழைந்த போராட்டக்காரர்களுடனும் ஸ்னோலினும், அவளது அண்ணன் மனைவியும், வனிதாக்கா மகளும் சென்றுள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில்தான் அந்த ஸ்னிப்பர் துப்பாக்கிகள் எந்த முன்னறிவிப்பும் இன்றிச் சீரிய வண்ணம் குண்டுகளை உமிழ்ந்தன. உள்ளே நுழைந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டோடி வந்துள்ளனர். சிறிது நேரத்தில் ஒரு உடல் கொண்டு செல்லப்பட்டபோது கூட அது தன் மகள் எனத் தெரியாமல் யார் வீட்டுப் பெண்ணோ பாவம் எனத் தான் கலங்கியதையும், பின்னர் அது தன் மகள்தான் என அறிந்த போது…

வல்லநாடு காவலர் பயிற்சியகத்தில் துப்பாக்கி சுடத் தீவிரப் பயிற்சி பெற்ற ஒரு காவலனால் குறி பார்த்துச் சுடப்பட்ட அந்தக் குண்டு அந்தப் பதினேழு வயதுச் சிறுமியின் பின் மண்டையைச் சரியாகத் துளைத்து உயிரைக் பறித்துள்ளதை அந்த அம்மை அறிந்த போது..

அவர் வாய்விட்டுப் புலம்பினார்.அந்தக் குடும்பமே கசிந்த கண்களுடன் எங்களைச் சுற்றி அமர்ந்திருந்தது.

நாங்கள் புறப்படும் முன் ஸ்னோலினுடைய அம்மா கண்களைத் துடைத்துக் கொண்டு தன் கையருகே வைத்திருந்த அந்த டைரியை எடுத்து ஒரு பக்கத்தைப் புரட்டி எங்களிடம் கொடுத்தார்.

“என் பொண்ணு ஏதோ படிக்கிறான்னுதான் நினைச்சேன். அவ எழுதுறத படிக்கிறதை என்னன்னு கேட்டதில்ல. என் குடும்பத்துல ஒரு பொண்ணு முத முதல்ல படிச்சு வக்கீலாகப் போவுதுன்னு… எத்தனை ஆசையா இருந்தேன்..

“ஐயா இதைப் படிங்க.. என் பொண்ணு எவ்வளவு அறிவா எழுதி இருக்கா… அவளுக்கு இப்புடி எல்லாம் எழுதத் தெரியும்னு எனக்குத் தெரியாதே..”

அந்த டைரியில் அந்தச் சிறுபெண் தன் அம்மாவிடம் ஏதோ சண்டை போட்டுவிட்டுப் பின் அதற்காக வருந்தி எழுதியிருந்தாள்…

நாங்கள் நெஞ்சு கனக்க வெளியே வந்தோம்…

ஒக்கி புயல்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here