தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினை தொடர்ந்து, ஆலையின் செயல்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

ஆனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல் முறையீடு செய்தது.

தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. அத்துடன் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவினை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது.

Courtesy : Dinamani