ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில் ஜாமீனில் வந்த வழக்குரைஞர் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், வழக்குரைஞர் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமது அடங்கிய அமர்வு, ஹரிராகவன் தரப்பு வாதங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு தூண்டியதாக ஹரிராகவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய அனுமதி கோரி காவல்துறையினர் கையெழுத்து கேட்டதாகவும், தான் அதற்கு அனுமதி அளித்ததாகவும் துத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், உங்களின் ஒரு கையெழுத்து தனிநபரின் வாழ்க்கையை பாதித்து விடும். தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக உங்கள் கையெழுத்து இருந்து விடக் கூடாது. காவல்துறை சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு செயல்படக் கூடாது.

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 93 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த நடவடிக்கை மிகவும் தவறானது என்று கூறி, ஹரி ராகவன் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்தனர்.

ஹரிராகவனுக்கு ஜாமீன் கிடைத்து 6 மணிக்கு வெளியே வந்த அவரை 6.10 மணிக்கு காவல்துறையினர் தேசத் துரோக வழக்கில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரிராகவன், மதுரைக் கிளை நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவத்தின் பின்னணி: தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த சத்தியபாமா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:

எனது கணவர் ஹரிராகவன் மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கலவரத்தைத் தூண்டியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த 6-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஹரிராகவன் சரணடைந்தார். நீதிமன்றக் காவலுக்கு பின்னர் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜாமீன் கோரி எனது கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 24-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் 26-ஆம் தேதி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் ஜாமீனில் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முறையான தகவல் அளிக்கப்படவில்லை.

எனவே இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், எனது கணவர் மீதான தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் தொடர்புடைய 90 பேருக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் மீது அடுத்தடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது சட்டவிரோத நடவடிக்கை. அதுபோலத்தான் மனுதாரரின் கணவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின்னர், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது போலீஸ் ஆட்சியா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்