மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களே காரணம் என மீனவ அமைப்புகள் சிலவும் மடத்தூர் கிராமத்தினரும் அடுத்தடுத்து மனு அளித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக மறுத்துள்ளது.

_102298493_aa8acd3b-abf9-4b42-b4c8-1f1b17604898

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை மூட வேண்டுமென்று கோரி, கடந்த மே 22ஆம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம், கலவரத்தில் முடிந்தது. இதில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்துவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று காரணம்காட்டி போலீசார் இரவு நேரங்களில் மக்களில் பலரை இன்னமும் கைது கைது செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 29) மீனவ கிராமமான திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோரே மே 22ஆம் தேதி போராட்டத்திற்கு மக்களைத் தூண்டியதாகவும் திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர்கள் மாதா கோயிலில் இருந்து புறப்படும்வரை உடன் இருந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், திடீரென மாயமாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயர் நீதிமன்றத்தில், மீனவ மக்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் வாதாடி வருவதாக அறிவதால், தாங்கள் பெரும் அச்சமடைந்ததாகவும் குறிப்பிட்டனர்.

_102298495_d2c316a4-8e0a-4cb1-92ce-589aff712337

மீனவர்கள் இவ்வாறு மனு அளித்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி, மூளைச் சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும் காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

மே 22ஆம் தேதி போராட்டத்தை மீனவ அமைப்புகள் தூண்டியதாக தாங்கள் சொல்லவில்லையென்றும் மீனவர்கள் கொடுத்த மனுவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து ஒருவரிகூட இல்லையென்பதை வைத்துப் பார்த்தாலே, இது சுந்திரமாக கொடுக்கப்பட்ட மனு அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜூலை 2ஆம் தேதியன்று மடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மாவட்ட சட்டப் பணிகள் குழுவின் செயலரைச் சந்தித்து இதே போன்ற மனுவை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், மே 20ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல்துறை கண்காணிப்பாளரும் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டதாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த அரிராகவன், தங்கபாண்டியன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் மனதை மாற்றி, எல்லா கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோரை பிணையில் விடக்கூடாது என்றும் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

“மடத்தூர், மீளவிட்டான் கிராமங்களில் கோயில் திருவிழா நடந்துவருகிறது. இந்தத் திருவிழா முடிந்த பிறகு கிராம மக்களைக் கைது செய்வார்களோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. ஆகவேதான், சட்டப் பணிகள் குழுவிடம் மனு அளித்திருக்கிறோம்” என மடத்தூர் மக்களின் சார்பாக இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்த தென் பாண்டி என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் தங்களை முதன் முதலில் அணுகியபோது அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தங்களுக்குத் தெரியாது எனவும் கூறிய தென் பாண்டியன், மே 22ஆம் தேதியன்று மடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் காவல் துறையினரால் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் தங்கள் பெயரையும் சேர்த்து வருவதாக தெரியவந்ததால் சட்டப் பணிகள் குழுவை அணுகியிருப்பதாக கூறினார்.

_102298497_gettyimages-961444166

தூப்பாக்கிச் சூட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் உசிலம்பட்டிப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிந்ததும்தான், மக்கள் அதிகாரம் அமைப்பினர் இந்தப் போராட்டத்தில் கலந்தது தங்களுக்குத் தெரியவந்தது எனவும் கூறிய தென் பாண்டியன், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு கலவரத்தில் ஈடுபடும் எந்த எண்ணமும் இருக்கவில்லையெனத் தெரிவித்தார்.

ஆகவேதான், பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.

காவல்துறையின் வற்புறுத்தலின் காரணமாக, மக்கள் அதிகாரம் அமைப்பைக் குற்றம் சாட்டுகிறீர்களா என்ற கேள்விக்கு, காவல் துறை தங்களைக் கைது செய்யுமோ என்ற அச்சத்தால், போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களின் பெயர்களைச் சொல்லியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த இரு குழுவினரும் குறிப்பிடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அரிராகவனைக் காவல்துறை தேடிவருகிறது. அடுத்தடுத்து இரு குழுக்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைக் குற்றம் சாட்டி மனு அளித்திருக்கும் நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, “இனி, இது தொடரக்கூடும். மேலும் சிலர் மக்கள் அதிகாரம் அமைப்பைக் குற்றம் சாட்டி மனு அளிப்பார்கள். காவல்துறையின் அச்சுறுத்தல், நெருக்குதல்தான் இதற்குக் காரணம்” என்று தெரிவித்தார்.

இவர்கள் அளித்த மனுவில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லையென்பதைச் சுட்டிக்காட்டும் அவர், உயர் நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த விவகாரத்தை விசாரித்தால்தான் இந்த அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்தார்.

_102301909_gettyimages-961440294

தூத்துக்குடி கலவரத்தைப் பொறுத்தவரை, அரசுதான் தூண்டியதே தவிர எந்த ஒரு தனி நபரும் அமைப்பும் கலவரத்திற்குக் காரணமில்லை என்கிறார் ராஜு.

காவல்துறை கிராம மக்களை அச்சுறுத்தி இதுபோல மனு அளிக்கச் செய்ததாகக் கூறும் புகார்களை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கடுமையாக மறுக்கிறார்.

“அதுபோல எந்த அச்சுறுத்தலிலும் நாங்கள் ஈடுபடவில்லை. கடந்த நான்கு வாரங்களில் எந்த கிராமத்திலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. மக்கள் அஞ்ச வேண்டாமென இப்போதும் கூறுகிறேன்” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முரளி ரம்பா.

ஆனால், அதே நேரம் இந்தக் கலவரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் ஆறு பேர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் என்று கூறிய முரளி ரம்பா, விசாரணையின் முடிவில் முழு விவரமும் தெரியவரும் என்று தெரிவித்தார்.

விரைவில் ஊடகங்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளிக்கப்போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

நன்றி : bbc tamil

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here