தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகப் பணிகளுக்காகத் திறக்கப்பட உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மாசுபடுவது, மக்களுக்கான பாதிப்புகளைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது.

மேலும், இறுதி தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கிடையாது. உள்ளே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஆலையை இயக்கக் கூடாது என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு திறக்கப்பட இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அரசு சார்பில் எடுக்கப்படவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருபணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்