ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ள குழுவுக்கு தலைவராக மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டது.
ஆனால் தமிழக அரசுத் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கியமான கோப்புகளை அவர்கள் அழித்து விடக் கூடும் என்ற வாதம் அரசுத் தரப்பில் முன்வைக்கபட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் அதே சமயம், கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் திங்களன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மனுவானது மீண்டும் திங்களன்று பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட உள்ள குழுவின் தலைவராக கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி நியமிக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தினார். இதற்கு தமிழக அரசுத் தரப்பு மற்றும் மற்றொரு மனுதாரரான வைகோவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று  பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்த குழுவானது 6 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. 
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக, ஏற்கனவே நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.ஜே.வசிப்தர் பொறுப்பு ஏற்க மறுத்திருப்பதாக தகவல் வந்து இருப்பதால் புதிய நீதிபதியின் பெயரை தீர்ப்பாயமே பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த கருத்தை ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அரிமா சுந்தரம் எதிர்த்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளை நியமித்தால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும் என்றும், எனவே அவர்களை நியமிக்கக்கூடாது என்றும் வாதிட்ட அவர், வேண்டுமென்றால் கேரளாவைச் சேர்ந்த பி.கே.பாலசுப்பிரமணியம் அல்லது மோகித் சர்மா ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.
அதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வைத்தியநாதன், புதிய நீதிபதியாக யாரை நியமித்தாலும் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றார்.
உடனே ஸ்டெர்லைட் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அரிமா சுந்தரம், இந்த பிரச்னையால் வழக்கு ஏற்கனவே ஒருவாரம் காலதாமதம் ஆகிவிட்டதாகவும், ஸ்டெர்லைட் நிர்வாக அலுவலகத்துக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுக்கிறார் என்றும், எனவே, அதற்கு தனியாக ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு வழக்குரைஞர் வைத்தியநாதன், இன்றைய வழக்கில் புதிய நீதிபதி நியமனம் தொடர்பாக மட்டுமே வாதம் செய்யப்பட வேண்டும் என்றும், வேறு எதற்காகவும் வாதம் செய்யக்கூடாது என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், புதிய நீதிபதியை நியமித்து உடனே உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மே 28-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஸ்டெர்லைட்டுக்கு தகுதி இல்லை என்றும், எனவே குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ள குழுவுக்கு தலைவராக மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

courtesy:dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here