ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை; புதிய அரசாணை வெளியிடவேண்டும் – உயர்நீதிமன்றம்

0
171

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துப் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை, ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக் கோருதல், உயிரிழந்தோர் குடும்பத்துக்குக் கூடுதல் நிதியுதவி உள்ளிட்ட 15மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது .

அப்போது அரசு வழக்கறிஞர், தூத்துக்குடியில் அமைதி திரும்பியுள்ளதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவியை உயர்த்தி 20லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான அரசாணையை மனுதாரர்களின் வழக்கறிஞர் நீதிபதிகளுக்கு வழங்கினார்.

அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் இந்த அரசாணை முறையாகப் பிறப்பிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.மின்சாரம், தண்ணீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், சுற்றுச்சூழல் அனுமதி திரும்பப் பெறப்பட்டதாகவும் மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆலையை மூட வேண்டுமென அரசு நினைத்தால் அது குறித்துக் கொள்கைமுடிவெடுத்துத் தகுந்த அரசாணை பிறப்பித்தால்தான் மூட முடியும் என்பதால், கொள்கை முடிவெடுத்துப் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினர்.

உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்துக்கு நூறுகோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பதில் இருந்தே அந்த ஆலையால் எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மனித உயிர் விலைமதிக்க முடியாதது என்றும் இருபது லட்ச ரூபாய் கொடுத்து அதை ஈடுசெய்ய முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். தூத்துக்குடியில் அமைதி திரும்பியுள்ளதாகக் கூறும் நிலையிலும் காவல்துறையினர் விசாரணை என்கிற பெயரில் பொதுமக்களைத் தொந்தரவு செய்வதாக வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து அதுகுறித்துத் தனி மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்