ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் வரை, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யுமாறு ஆலை நிர்வாகம் வைத்த கோரிக்கையையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது .

அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திடீரென்று ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்தது’ என்று கூறப்பட்டிருந்தது .

மேலும் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணை நடத்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நீங்கள் வந்து கேட்டதும் உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. ஆலை தொடர்ந்து இயங்குவதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது.

வழக்கு விசாரணையை 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்திருக்கும் மனு மீது தமிழக அரசு 19ஆம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை, ஜூலை 5) விசாரணைக்கு வருகிறது. எனவே அந்த வழக்கு விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தவே வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here