ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனக் கசிவு ; வல்லுநர் குழு ஆய்வு

0
300

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதை அப்புறப்படுத்தப்படும் பணி நாளை தொடங்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து உதவி ஆட்சியர் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 2 மாதமாக ஆலை இயங்கவில்லை. ஆலை வளாகத்தில் அமிலங்கள், ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வு விவரங்களை ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிப்போம் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது.ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். உரிய பாதுகாப்புடன் திங்களன்று காலை அதிகாரிகள் ஆலைக்குள் சென்று கசிவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று இரவு முழுவதும் ஸ்டெர்லைட் ஆலையை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here