தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலங்களை அகற்றுவது தொடர்பாக உயர்மட்டக் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அரசுத் தரப்பில் கூறியதையடுத்து வேதாந்தா குழும கோரிக்கையை நிராகரித்து வழக்கினை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், “ஸ்டெர்லைட் ஆலை கடந்த 24 ஆண்டுகளாக சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையின் 2-வது யூனிட் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்விளைவாக ஸ்டெர்லைட் ஆலை படிப்படியாக மூடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.

இந்தநிலையில் கடந்த 16 ஆம் தேதி கந்தக அமிலம் குழாயில் கசிவு ஏற்பட்டது. அப்போது இரவு நேரம் என்பதாலும், மின் இணைப்பு இல்லாததாலும் உரிய நேரத்துக்கு சென்று குழாயில் ஏற்பட்ட கசிவைத் தடுக்க முடியவில்லை. இதேபோல எல்பிஜி கியாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை தொடர்ந்து பராமரிக்கப்படாமல் இருந்தால் குழாய்களில் கசிவோ, வேறு ஏதேனும் ஆபத்துகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

இதனால் தொழிற்சாலையைச் சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பணியாளர்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்ப உத்தரவிட வேண்டும். பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலங்களை அகற்றுவது தொடர்பாக உயர்மட்டக் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அமைத்த 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு குறிப்பிட்ட ஒருசில அமிலங்களை 90 நாட்களுக்குள் அகற்றப் பரிந்துரைத்துள்ளது. உயர்மட்டக் குழு பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான குழு அமைத்து அமிலங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலங்களை அகற்றும் பணிகளை அரசு பாதுகாப்பாக செய்து வருகிறது, வேதாந்தா குழுமக் கோரிக்கையை நிராகரித்து வேதாந்த குழுமம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக மின் இணைப்பு மற்றும் பணியாளர்களை அனுமதிக்க அவசியமில்லை என கூறி வழக்கினை முடித்துவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here