ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்வாகப் பணிகளுக்காக ஆலைக்குள் செல்லலாம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும் ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் அந்த மனுவில் காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகள் மீறப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது .

இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது .

இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை பசுமைத் தீர்ப்பாயத்தில், நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் நடைபெற்றது. அப்பொழுது ஆலை நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறைந்த பட்சமாக 30 நாட்களாவது ஆலை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது .வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கியமான கோப்புகளை அவர்கள் அழித்து விடக் கூடும் என்ற வாதமும் தமிழக அரசு சார்பில் முன்வைக்கபட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் அதே சமயம், கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் ஜூலை 9, 2018 அன்று பதவியேற்றார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனங்கள் மற்றும் இதர வளங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2010-இல் உருவாக்கப்பட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதல் தலைவராக நீதிபதி லோகேஷ்வர் சிங் பொறுப்பேற்றார். அவர் 2011-இல் ஹிமாசலப் பிரதேச லோக் ஆயுக்த தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பசுமைத் தீர்ப்பாய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தலைவராக ஸ்வதந்தர் குமார் பதவியேற்று , 5 ஆண்டு பணிக் காலத்தை நிறைவு செய்து, கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றார். அதன்பின், நீதிபதிகள் உமேஷ் தத்தாத்ரேய சால்வி, ஜாவத் ரஹீம் ஆகியோர் பொறுப்பு தலைவர்களாக அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்