ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தருண் அகர்வால் குழு அளித்துள்ள அறிக்கை முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் குழு, சமர்ப்பித்த 48 பாகங்களைக் கொண்ட அறிக்கை, ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான தீர்ப்பு அளிப்பதற்கு வழிவகை செய்துள்ளது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவின் தலைவர் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

தருண் அகர்வால் அளித்துள்ள அறிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாத்திமா பாபு, ”ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய மாசுபாடு மற்றும் அபாயகரமான கழிவுகளை கையாளுவது மற்றும் பிற விதிமுறை மீறல்கள் குறித்து எந்தவிதமான கண்டுபிடிப்புகளையும், தருண் அகர்வால் குழு அறிக்கையில் குறிப்பிட்டதுபோல தெரியவில்லை. இந்த குழுவின் நடுநிலைமை தன்மையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். ஆனால் எங்களின் இந்த வாதத்தை மனு வாயிலாக தெரிவித்தபோதுகூட, அதை விசாரணை செய்யாமல் நிராகரித்துவிட்டனர்,” என்று தெரிவித்தார்.

மேலும் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பாத்திமா பாபு, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் சிவசுப்ரமணியம் மற்றும் சந்துரு ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சார்புடையவர்களாக இருப்பார்கள் என ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கறிஞர் வாதாடியபோது அந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நினைவுகூரவேண்டும் என்று கூறியுள்ளார்.

”ஸ்டெர்லைட் ஆலை தனது நிலையை எடுத்துச்சொல்ல வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதை கூறி இதற்கு முன்னர் தமிழக அரசு மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் அளித்துள்ள ஆணைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என தருண் அகர்வால் குழு கூறியுள்ளதாக அறிகிறோம். தருண் அகர்வால் அளித்துள்ள அறிக்கையின் நகல் ஒன்றை எங்கள் தரப்புக்கு தர இயலாது என பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஏ.கே.கோயல் நீதிமன்றத்தில் மறுத்துவிட்டார். இதை எங்கள் தரப்பு கேள்விகேட்டதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை,” என பாத்திமா கூறுகிறார்.

அடுத்த ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என டிசம்பர் 7ம் தேதிக்கு பசுமை தீர்ப்பாயம் வழக்கை தள்ளிவைத்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கையை தங்களுக்கு அளிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Courtesy : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here