ஸ்டெர்லைட் போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தை தற்கொலை செய்வது போன்றதாகும் என்று ஜக்கி வாசுதேவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்கு பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதிமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

100-வது போராட்டத்தின்போது மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தார்கள், பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது .அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்தனர்.

இந்நிலையில் தற்போது ஈஷா நிறுவனத்தின் ஜக்கி வாசுதேவ் ஆலை மூடப்பட்டது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“ காப்பர் உருக்காலை பற்றி சொல்வதற்கு நான் நிபுணர் அல்ல. இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் காப்பரின் தேவை இருக்கிறது என்று எனக்கு தெரியும்.நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக பேசப்பட வேண்டிய விஷயம். பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை ” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக தொழிற்சாலைகள் நாட்டின் கோயில்கள்,மூடக்கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பாபா ராம்தேவ் குரல் கொடுத்தார்.